ADDED : அக் 04, 2025 11:23 PM
திருப்பூர்:ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு பொருள் வாங்கும் கார்டுதாரர்களில், 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் கார்டுதாரர், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொரும் வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த இரு மாதங்களாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை கொண்டு சென்று வழங்கி வருகின்றனர். இத்திட்டம் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு அக்., மாதம், 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், முதல் வாரத்திலேயே இந்த கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க கூட்டுறவு துறை பதிவாளர் உத்தரவிட்டார். இதனை செயல்படுத்த முடியாது என ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர் விடுமுறை காரணமாக பொருட்கள் கடைகளுக்கு வந்து சேருவது சிரமம்; பொருள் வழங்க திட்டமிடப்பட்ட, 5ம் தேதி, துறைரீதியான தேர்வு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான முதல் தவணை பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு கடந்த இரு நாட்களாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதனால், திட்டமிட்டபடி இன்றும், நாளையும் (5 மற்றும் 6ம் தேதி) 'தாயுமானவர்' திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறையினர் தெரிவித்தனர்.