/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமையுமா?
/
பல்லடத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமையுமா?
ADDED : அக் 04, 2025 11:23 PM

பல்லடம்:கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் அமைந்துள்ளதால், கோவையில் இருந்து கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டிணம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள் ளிட்ட தொலைதுாரங்களுக்கு செல்லும், நுாற்றுக்கணக்கான பஸ்கள் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வருகின்றன.
திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு, வால்பாறை செல்லும் பஸ்கள், சூலுார், சோமனுார், காரணம்பேட்டை, திருப்பூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து டவுன்பஸ்களும் இங்கு தான் வந்து சேருகிறது.
இதனால், ஒரு நிமிடத்துக்கு ஒரு பஸ் கட்டாயம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து விடுகிறது. அதிகாலை 4:45 மணிக்கு துவங்கி, நள்ளிரவு, 12:50 மணி வரை தொடர்ந்து பஸ்கள் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரு காலத்தில் கோவை மாவட்டமாக பல்லடம் இருந்த போது, இருபது ஆண்டுக்கு முன் எந்தளவில் பஸ் ஸ்டாண்ட் இருந்ததோ அதே அளவில் தான் தற்போதும் உள்ளது.
கடைகள், வணிக வளாகங்கள் உருவாகினாலும், பஸ் வந்து, வெளியேறும் நுழைவு வாயில், பஸ் நிற்குமிடம் போதுமானதாக இல்லை. இதனால், பெயரளவுக்கு பஸ் ஸ்டாண் டாகவும், பஸ் டிரைவர், நடத்துனர்களை பொறுத்த வரை பஸ் நின்று, பயணிகளை ஏற்றி இறக்கும் ஒரு பஸ் ஸ்டாப்பாக மட்டுமே பல்லடம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
தேவை மாற்றம் குறிப்பாக திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் தான் பல்லடத்துக்கு அதிகமாக வருகின்றன. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றாக, தொலைதுாரம் செல்லும் பஸ்கள் மட்டும் நின்று செல்ல ஏதுவாக, பல்லடத்தில் புறநகர பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.
பனப்பாளையம் பிரிவு அருகே, திருச்சி - மதுரை நெடுஞ்சாலை பிரிகிறது. அதற்கு அருகே பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தினால், மக்களுக்குசவுகரியமாக இருக்கும்.
தற்போது, தொலைதுாரம் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து திரும்புவதால், மங்கலம் ரோடு சிக்னல் துவங்கி, மாணிக்காபுரம் பிரிவு சாலை வரை நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்லும் பஸ்களுக்கென தனி பஸ் ஸ்டாண்ட் பிரித்து விட்டால், நகரின் நெரிசலும் பாதியாக குறையும். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமங்களும் குறையும்.
தீபாவளிக்கு முன்னதாக ஏற்படுத்தலாம்
பல்வேறு தொழில், வேலை வாய்ப்புகளை நம்பி, தென்மாவட்டத்தினர் பலர் கோவையில் வந்து வசிக்கின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தீபாவளி பண்டிகையின் போது, இயங்கும் பஸ்களை விட இருமடங்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த இடமில்லாத நிலை, ஒவ்வொரு ஆண்டும்ஏற்படுகிறது.
பயணிகள் பஸ் ஏறி, இறங்க பெரும் அவதியுறுகின்றனர். இச்சிரமங்களை தவிர்க்க நடப்பாண்டு தீபாவளிக்கு முன்னதாக, ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து தற்காலிக புறநகர பஸ் ஸ்டாண்ட் சோதனை முறையில் ஏற்படுத்த வேண்டும். தொலைதுார செல்லும் பஸ்களை அங்கு நிறுத்தி இயக்கி பார்க்கலாம்.