ADDED : ஜூன் 26, 2025 12:23 AM
திருப்பூர்; குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உத்தரவின் பேரில், பொங்கலுாரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், திருப்பூர் தாசில்தார் (பொறுப்பு) ராகவி உள்ளிட்டோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பல்லடம் - பொங்கலுார் ரோட்டில், வாய்க்கால் மேடு பகுதியில் ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, 1,100 கிலோ ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த வெங்கிடுசாமி, 56, சித்தாத்தியன், 45 ஆகியோர் பல்லடம், காங்கயம்பாளையம், வளையபாளையம், மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதியில் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க, பதுக்கி வைத்திருப்பதும், வாகனத்தில் கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆம்னி வேன், 1100 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.