/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணருங்கள்
/
முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணருங்கள்
ADDED : அக் 16, 2025 11:22 PM

மு துகெலும்பு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஊக்கு விப்பதற்காக, முதுகெலும்பு ஆரோக்கியத்தின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள, உலக முதுகெலும்பு தினம், ஒவ்வொரு ஆண்டும், அக். 16ல் கடைபிடிக்கப்படுகிறது. 'உங்கள் முதுகெலும்பில் முதலீடு செய்யுங்கள்' என்பது நடப்பாண்டின் கருப்பொருள்.
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மயக்கவியல் மற்றும் வலி நிவாரண துறை, உதவி பேராசிரியர் ஹேமானந்த் கிருஷ்ணமூர்த்தி நம்முடன் பகிர்ந்தவை:
முதுகெலும்பு ஐந்து வகை களாக பிரிக்கப்படுகிறது; சர்விக்கல் (கழுத்து எலும்பு), தொராசிக் (மேல்முதுகெலும்பு), லம்பார் (கீழ்முதுகெலும்பு), ேஷக்ரம்(இடுப்பு எலும்பு), காக்கீஸ்(வால் பகுதி) என ஐந்தாக பிரிக்கப்படுகிறது. சர்விக்கல் ஏழு தனித்தனி முதுகு தண்டுவட எலும்புகள் இருக்கும்; தொராசிக்கில், 12 எலும்புகள், லம்பார், ேஷக்ரம், காக்கீஸ் ஆகிய மூன்றில் தலா ஐந்து எலும்புகள் இருக்கும்.
ேஷக்ரம், காக்கீஸ்-ல் இருக்கும் எலும்புகள் குழந்தையாக இருந்து பெரியவர்களாக வளரும் போது, ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒன்றாகவே மாறி விடும். சர்விக்கல், தொராசிக், லம்பார் ஒவ்வொரு முதுகெலும்புக்கும் நடுவில் ஒரு 'டிஸ்க்' இருக்கும். டிஸ்க் முதுகெலும்புகளை தனித்தனியே பிரித்து வைத்திருக்கும். எலும்பு, வெர்டபிரல் பாடி, டிஸ்க் என்ற அமைப்புடன் அமைந்திருக்கும். மூளையில் துவங்கி, கால் விரல் வரை இணைப்பு இருக்கும்.
n முதுகுவலி, டிஸ்க் பிரச்னை அதிகரிப்பது ஏன்?
நேராக, நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சீரற்ற நிலையில் அதீத கணினி பயன்பாடு, மிதமிஞ்சிய மொபைல்போன் பயன்பாடு (தலைகுனிந்த நிலையில்) கூடாது. குறிப்பிட்ட டிகிரிக்கு மேல் நாம் குனியும் போது, கழுத்து, முதுகுக்கு அழுத்தம் அதிகரிக்கும். முதுகுவலி, டிஸ்க் பிரச்னை வராமல் இருக்க, உடற்பயிற்சி கட்டாயம். குறைந்தபட்ச நேரமாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.
n 'சைட்டிகா', 'ஸ்லிப் டிஸ்க்' பிரச்னை எனில் என்ன, தீர்வு உண்டா?
கட்டுமான பணி அல்லது பிற வேலைகளின் போது அதிக பாரம் துாக்குவது, தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, கழுத்தை அதிகமாக வளைத்து, சாதகம் இல்லாமல் பல நாட்கள் உறங்கும் பழக்கம் ஆகியவற்றால் 'ஸ்லிப் டிஸ்க்' ஏற்படலாம். இவர்களுக்கு 'டிஸ்க்' லேசாக பிதுங்கி, நரம்பு அழுத்தத்தை தரும். இது தொடரும் போது வலி அதிகமாகும். கை, கால், விரல்கள் மரமரப்பு அடிக்கடி ஏற்பட்டால், டம்ளரில் தண்ணீர் துாக்க முடியவில்லை. செருப்பு காலில் அணிய முடியாத அளவு மரமரப்பு உள்ளிட்டவை உணர்ந்தால், டாக்டரை சந்திப்பது நல்லது.
n ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்போருக்கு முதுகுத்தண்டு பிரச்னை வரக்காரணம் என்ன?
சாதகமான நிலையில் அமராதது; ஏதுவான இருக்கைகளை பயன்படுத்தாதது தான் காரணம், முதுகுத்தண்டில் இருந்து தலை தவிர, நரம்புகள் உடல் முழுதும் பயணிக்கும்; பாதம் வரை இது தொடரும். இதனால் கை, கால் செயல்பாடு அவ்வப்போது இருக்க வேண்டும். முதுகு வலியை தவிர்க்க, ''எர்கானிமிக் சாப்போட்டிவ் சேர்' பயன்படுத்தலாம். முதுகு, தண்டுவட அமைப்பு ஏதுவானவையாக இந்த இருக்கைகள் அமைகின்றன.
n தற்போதைய சிகிச்சை முறைகள் என்ன? அறுவைசிகிச்சைகள் எதற்குத் தேவைப்படும்?
ஒவ்வொருவரின் வலி, உடலுக்கு ஏற்ப சிகிச்சை மாறுபாடுகள் உள்ளது. துவக்கத்தில், அதாவது கழுத்துவலி, கை, கால் மரமரப்பு உணரும் போதே வந்து விட வேண்டும். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, சிகிச்சைகளை துவங்க வேண்டும்.
இப்பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரை மூலம் தீர்வுகள் நிறைய உள்ளது.
அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியதில்லை. ஆனால், எப்போது சிகிச்சை, ஆலோசனை பெற வந்தோம், சிகிச்சையை துவக்கினோம் என்பது முக்கியம்.
n திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வசதிகள்...
முதுகெலும்பு, தண்டுவட பிரச்னைகளை துல்லியமாக கண்டறிய, உயர்தர கருவிகள், ரேடியோ பிரிக்குவன்சி மெஷின்கள் உள்ளன.
n உடற்பயிற்சி அவசியமா?
கட்டாயம், உடற்பயிற்சி மிகவும் அவசியம். முதுகெலும்பு வலியை தவிர்க்க அதிக நேரம் முன்னோக்கி, முன்புறம் குனிவதை தவிர்க்க வேண்டும். அவசரமாக இருந்தாலும், கால்களை மடக்கி, மண்டியிட்டு, குனியலாம். அதிக எடையை அலட்சியமாக துாக்குவது தவறு. மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் ஆலோசனைக்கு முன் பிசியோதெரபி மேற்கொள்வது வலியை தரும். ஒவ்வொருவரது உடல்நிலைக்கு ஏற்ப உடற்பயிற்சியும், யோகா முறைகளிலும் மாற்றங்கள் உண்டு.இவ்வாறு, ஹேமானந்த்கிருஷ்ணமூர்த்தி கூறினார்.