/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரத்தில் அடுத்தடுத்த பரபரப்பு
/
குப்பை விவகாரத்தில் அடுத்தடுத்த பரபரப்பு
ADDED : அக் 16, 2025 11:23 PM

திருப்பூர்: திருப்பூரில் சேகரமாகும் குப்பை கழிவுகள், முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்பினர், விவசாய அமைப்பினர் என பலர் ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில், அவர்களை உள்ளடக்கி 'திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், 'வரும், 22ம் தேதி வரை பாறைக்குழியில் குப்பைக் கொட்டக்கூடாது; பாறைக்குழியில் தேங்கியுள்ள குப்பைக்கழிவில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும்' எனவும், ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியது.
நள்ளிரவில் கூடிய மக்கள் நேற்று முன்தினம், நள்ளிரவு, 1:00 மணிக்கு முதலிபாளையம் கிராம மக்கள் மற்றும் திருப்பூர் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த சிலர், பாறைக்குழிக்கு சென்று பார்த்த போது, பாறைக்குழியில் தேங்கி நின்ற கழிவுநீர், மோட்டார் வாயிலாக உறிஞ்சி, தனியாக சேகரித்து, கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் வாயிலாக எடுத்துச் செல்லும் பணி நடந்து கொண்டிருந்தது.
'அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் கழிவுநீர், ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள சாக்கடையில் வெளியேற்றப்படுகிறது' என, அங்கு கூடிய மக்கள், போலீசாருக்கு புகார் தெரிவித்த நிலையில், சேகரிக்கப்பட்ட கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு நிலையத்துக்கு சென்று, அவர்கள் பார்வையிட முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
மாநகராட்சி விளக்கம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர், 'முதல்வரின் முகவரி,' திட்டத்தின் கீழ், முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனு வழங்கினார்.
இதற்கு, மாநகராட்சி உதவி கமிஷனர் (மண்டலம் - 3) அளித்துள்ள விளக்கம்:
முதலிபாளையம் பிரிவு பாறைக்குழியில் ஆய்வு மேற்கொண்டதில், கடந்த, 2016 வரை, முதலிபாளையம் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான பாறைக்குழியில், பாதுகாப்பான முறையில் நிலத்தடி நீர் கெடாத வகையில் எச்.டி.பி.இ., விரிப்பு (அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பு) முழுமையாக விரித்து, அதில் கொட்டப்படும் குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி கழிவுநீர் வாகனம் வாயிலாக, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வந்தது.
தற்போதும், பாறைக்குழிகளில் இதே நடைமுறையை பின்பற்றி தான், குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்துாள் தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமில்லாத வகையில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.