/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்யுங்க! கிராமங்களில் செயல்படுத்த வலியுறுத்தல்
/
மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்யுங்க! கிராமங்களில் செயல்படுத்த வலியுறுத்தல்
மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்யுங்க! கிராமங்களில் செயல்படுத்த வலியுறுத்தல்
மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்யுங்க! கிராமங்களில் செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 20, 2024 07:16 PM
உடுமலை; உடுமலை ஒன்றிய கிராம ஊராட்சிகளில், சேகரிக்கப்படும் மக்காத கழிவுகளை மறுசுழற்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில், அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்தவும்திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குப்பையை உரமாக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் போன்ற பணிகள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், துாய்மைக்காவலர்கள் என்ற அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியாளர்களை கண்காணிக்கவும், பணிகளை பிரித்து வழங்கவும் பணித்தள பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வீடுகளுக்கு, ஒரு பணியாளர் விகிதத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளனர்.
பணியாளர்கள், வீடுகளில் உள்ள குப்பைக்கழிவுகளை சேகரித்து, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து, இறுதியாக உரமாக்க வேண்டும்.ஆனால் குப்பைக்கழிவுகளை தரம் பிரிக்கவும், உரமாக்கவும் அமைக்கப்பட்ட குடில்கள்பயனில்லாமல் உள்ளது.
திட்டத்தின் துவக்கத்தில், தரம் பிரிக்கும் பணிகளை பணியாளர்கள் தொடர்ந்து பின்பற்றினர். தற்போது கழிவுகளை, வீடுகளில் சேகரித்து, திறந்த வெளியில் வைத்து எரிப்பதையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகங்களும், திடக்கழிவுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பபதால் இப்பிரச்னை தொடர்கிறது.
தவிர மக்காத கழிவுகளை, நகராட்சிநிர்வாகம் வாயிலாக, மறுசுழற்சி செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மக்காத கழிவுகளை ஊராட்சிகள் தோறும் சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்வதற்கு ஒன்றிய நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாக, கிராமப்பகுதிகளில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த, மறுசுழற்சி திட்டத்துக்கு ஒன்றிய நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைப்பினர் மற்றும் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விஷயத்தில், தமிழக அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.