/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு... மக்காச்சோளத்துக்கு மவுசு!நிலையான விலையால் சாகுபடி பரப்பும் கூடுதலாகும்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு... மக்காச்சோளத்துக்கு மவுசு!நிலையான விலையால் சாகுபடி பரப்பும் கூடுதலாகும்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு... மக்காச்சோளத்துக்கு மவுசு!நிலையான விலையால் சாகுபடி பரப்பும் கூடுதலாகும்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரிப்பு... மக்காச்சோளத்துக்கு மவுசு!நிலையான விலையால் சாகுபடி பரப்பும் கூடுதலாகும்
ADDED : மார் 20, 2024 12:18 AM

உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இருப்பு குறைந்துள்ளது. நிலையான விலை கிடைப்பதால் வரும் சீசன்களில், சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., பாசனம், அமராவதி, இறவை பாசனம் மற்றும் மானாவாரி பாசனத்தில், ஆண்டு முழுவதும் ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள், உணவுப்பொருட்கள் உற்பத்திக்கு மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ள நிலையில், தற்போது எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் மூலப்பொருளாக பயன்படுவதால், தேவை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு பருவ மழைப்பொழிவு குறைந்த நிலையில், பாசனத்திற்கு நீர்திறப்பு தாமதம் உள்ளிட்ட காரணங்களினால், இதன் சாகுபடி பரப்பு குறைந்தது.
வழக்கமாக உடுமலை பகுதிகளில், பிப்., மாதம் அறுவடை துவங்கி, ஏப்., வரை நீடிக்கும். கடந்தாண்டு பருவ மழை தாமதம் காரணமாக, ஒரு சில பகுதிகளில் ஒரு மாதம் கழித்தும், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது, உடுமலை பகுதிகளில் இதன் அறுவடை தீவிரமடைந்துள்ளது. வரத்து அதிகரித்தாலும், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளம், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து உலர் களங்களில் காயவைக்கின்றனர். விவசாயிகள்இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.
4,500 குவிண்டால் வந்தது
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு, தற்போது மக்காச்சோளம் வரத்து அதிகளவு காணப்படுகிறது. சராசரியாக தினமும், 250 குவிண்டால் மக்காச்சோளம் விற்பனைக்கு வருகிறது.
கடந்த பிப்., முதல், நேற்று வரை, 4,500 குவிண்டால் வரை விவசாயிகள் கொண்டு வந்து, விற்பனை செய்துள்ளனர்.
ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த ஏலத்தில், ஒரு குவிண்டால், 2,220 முதல், 2,260 வரை விற்றது. ஏலத்தில், கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவு பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
விலை உயர்வு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது விலை கூடுதலாக நிலவி வருகிறது. கடந்தாண்டு, இதே சீசனில், குவிண்டால், 1,850 ரூபாய் வரை மட்டுமே விற்றது.
இதனால், ஒழுங்கு முறை விற்பனைக்கூட குடோன்களில், 25 ஆயிரம் குவிண்டால் வரை விவசாயிகள் இருப்பு வைத்து, விலை கிடைத்த போது விற்றனர்.
நடப்பு ஆண்டு, சீசன் துவங்கியது முதலே, கூடுதல் விலை கிடைத்து வருவதால், இருப்பு வைக்காமல் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு பிப்., துவங்கி, மே வரை மக்காச்சோளம் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு விலை சரிந்ததால், இருப்பு வைத்து, விவசாயிகள் விற்பனை செய்தனர்.
ஆனால், நடப்பாண்டு, அறுவடை சீசன் துவங்கியது முதலே, வரத்து அதிகரித்தாலும், விலை நிலையாக உள்ளதோடு, மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
இதனால், மீண்டும் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து, மக்காச்சோளம் தேவை அதிகரித்து வருவதால், விலை நிலையாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

