/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத நல்லிணக்கமே ஒற்றுமைக்கு வழி
/
மத நல்லிணக்கமே ஒற்றுமைக்கு வழி
ADDED : பிப் 22, 2026 06:39 AM

''மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால், நம் தேசம் மட்டுமல்ல; உலகமே ஒன்றுபட்டு இருக்கும்'' என்று கூறுகிறார், கலிமுல்லா, 49.
இந்தாண்டு, சென்னையில் நடந்த குடியரசு தின விழாவின்போது, தமிழக அரசின் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' பெற்றவர். திருப்பூர் - காங்கயம் ரோடு படியூர் அடுத்த ஒத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு பத்திரத்தையும், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.
கலிமுல்லா நம்மிடம் பகிர்ந்தவை:
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். கார்மென்ட்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். ஒத்தப்பாளையத்தில் தானமாக வழங்கிய இடம் இருந்தது. கடந்த 2006ல் சைட் போட்டு, கடை கட்டி விற்க திட்டமிட்டிருந்தோம். கோவில் கட்ட நிலத்தை கேட்ட போது, நிலத்தையும், மூன்று லட்சம் பணத்தையும் மனமுவந்து வழங்கினோம்.
எனக்கு 'பி நெகட்டிவ்' ரத்தப்பிரிவு. அரிதான ரத்தப்பிரிவு; யாராவது தேவையென கேட்டால் உடனே கிளம்பி மருத்துவமனைக்கு சென்று விடுவேன். இதுவரை 65க்கும் மேற்பட்ட முறை ரத்ததானம் வழங்கியுள்ளேன்.
நாம் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும்; மதநல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நாம் சேர்ந்திருந்தால், இந்தியா மட்டுமல்ல; உலகமே ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு கலிமுல்லா கூறினார்.
தற்போது, திருப்பூர் காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டன், பாலாஜி நகரில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். மனைவி ஷாஹிராபானு; மகள் ரஹிமாபர்வீன் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிக்கிறார்; மகன் அப்துல்லா.

