/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் சேதமான ரோடுகளை சீரமையுங்க
/
ஊராட்சிகளில் சேதமான ரோடுகளை சீரமையுங்க
ADDED : ஜன 21, 2025 10:21 PM
உடுமலை; கிராம ஊராட்சிகளில், குண்டும் குழியான ரோடுகளை சீரமைப்பதற்கு, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ளதால், சிறப்பு அலுவலர்கள் பொறுப்பில் உள்ளனர்.
சில ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் மற்றும் புகார்களை பதிவு செய்வதற்கு, ஊராட்சி அளவிலான சிறப்பு அலுவலர்கள் 'வாட்ஸ் ஆப்' எண்கள் வழங்கியுள்ளனர். இருப்பினும், அனைத்து ஊராட்சிகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படவில்லை.
கிராம ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக, சீரான சாலைகள் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஊராட்சிகளில் மட்டுமே, 90 சதவீத பகுதிகளில் தார்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பெரும்பான்மையான ஊராட்சிகளில், பல பகுதிகளில் ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியாகவே உள்ளது. இரண்டு நாட்கள் மழை பெய்தாலும், மழைநீர் தேங்குகிறது. தொடர்ந்து சேதமாகி வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வாகனங்களை ஓட்டுவதற்கும் முடியாமல், இன்னலுக்கு ஆளாகின்றனர். தற்போது சிறப்பு அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளதால், கிராமங்களில் தார்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.