/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண் போலீசாருக்கும் 'ஜிம்' அமைக்க கோரிக்கை
/
ஆண் போலீசாருக்கும் 'ஜிம்' அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 11:47 PM
- நமது நிருபர் -
உடலை கட்டுக்கோப்புடன் பராமரிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் பெண் போலீசாருக்கு சமீபத்தில் ஜிம் திறக்கப்பட்டது. இதேபோல், ஸ்டேஷன்களில் உள்ள ஆண் போலீசாருக்கு 'ஜிம்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மாநகர் மற்றும் மாவட்டம் என, இரண்டு பிரிவுகளாக போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான போலீசார் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் சிலர் அதிக வயிறு, சர்க்கரை வியாதி, சுவாசக்கோளாறு, ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் தவிக்கின்றனர். பணிசுமையால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக, போலீசாருக்கு அவ்வப்போது உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. போலீசார் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் பராமரிக்கவும், உடற்பயிற்சி செய்யும் வகையில், கடந்த, இரு ஆண்டு முன்பு ஆயுதப்படையில் உள்ள போலீசார் உடற்பயிற்சி செய்யும் வகையில் 'ஜிம்' ஏற்படுத்தப்பட்டது.
பின், இவ்வாண்டு துவக்கத்தில், போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பெண் போலீசார் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் குடும்பத்தினரின் பெண் உறுப்பினர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) திறக்கப்பட்டது. ஆனால், பணிபுரியும் ஆண் போலீசாருக்கு என, பிரத்யேகமாக 'ஜிம்' அமைக்கப்படாமல் உள்ளது.
ஆயுதப்படை போலீசார் மற்றும் பெண் போலீசாருக்கு அமைக்கப்பட்டுள்ளது போன்று, மாநகர ஸ்டேஷன்களில் பணிபுரியும் ஆண் போலீசார் உடற்பயிற்சி மேற்கொள்ள 'ஜிம்' அமைக்க வேண்டும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.