ADDED : ஏப் 14, 2025 11:26 PM

பரபரப்பான திருப்பூர் - பல்லடம் ரோட்டிலிருந்து தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வழியாக தெற்கு நோக்கிப் பிரிந்து செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது செல்வபுரம் காலனி.
திருப்பூர் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத, 1980ம் ஆண்டு காலகட்டத்தில், விவசாயம் மெல்ல மறைந்து, ஜவுளி மில் மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகள் திருப்பூரை மையமாகக் கொண்டு வளரத் துவங்கியது. அப்போது, விவசாய நிலத்தை மனையிடமாக மாற்றிய போது, இந்த குடியிருப்பு பகுதி தோன்றியது. ஈஸ்வரமூர்த்தி தலைவராகவும், துரை செயலாளராகவும் குடியிருப்போர் நலச்சங்கத்தை துவங்கினர்.
குடியிருப்பு பகுதியில் மையமாக அமைந்துள்ள, 18 சென்ட் இடத்தில் தற்போது சிறுவர் விளையாட்டு பூங்கா, சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்புடன் அமைந்துள்ளது. பள்ளிகளில் கோடை விடுமுறை என்பதால் குட்டீஸ், குதுாகலமாக ஊஞ்சல் விளையாடியும், சிறிய சைக்கிள்களில் வலம் வந்தபடியும் இருந்தனர். தங்கள் வீட்டு குழந்தைகளை பூங்காவில் விளையாட விட்டு விட்டு சில பெரியவர்கள் ஊர்க்கதை பேசியபடி நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.
செல்வபுரம் காலனி, குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த ரத்தினம், கவுசிக் பிரசாந்த், சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 45 ஆண்டுகள் முன் இந்த குடியிருப்பு பகுதி அமைந்த போது, குடியிருப்போர் நலச்சங்கம் துவங்கப்பட்டது. அதன் நிர்வாகிகளாக இருந்த இருவரும் அண்மையில் காலமாகி விட்டனர். இருப்பினும் அந்த அமைப்பை அதே முறையில் நாங்கள் நடத்தி வருகிறோம்.
முழுமையடையாத
குடிநீர் இணைப்பு
எங்கள் பகுதியைப் பொறுத்தவரை குடிநீர் முறையாக கிடைக்கிறது. சில வீடுகளில் குழாய் இணைப்பு பணிகள் நின்று போய் விட்டது. அதனை முறையாக செய்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை இணைப்புகளும் சில வீடுகளில் முழுமை பெறாமல் உள்ளது. அதேபோல் பாதாள சாக்கடை திட்டம், 4வது குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்கு ரோடு தோண்டப்பட்டது.
சீரமைக்கப்பட
வேண்டிய சாலை
கடந்த, 2012ம் ஆண்டில் தான் புதிய ரோடு அமைக்கப்பட்டது. குழி தோண்டிய நிலையில் சில இடங்களில் சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது.
குப்பைகளை வீடுகளில் வந்து துாய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இதனால், குப்பை பிரச்னை இல்லை. ஆனால், செல்வபுரம் பிரதான ரோட்டில் குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளனர். வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.
அடிக்கடி விபத்துகள்
தென்னம்பாளையம் ஸ்கூல் ரோட்டிலிருந்து செல்வபுரம் பகுதிக்கு பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால், பிரிவிலிருந்து வரும் வாகனங்களைக் கவனிக்காமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதே போல் தென்னம்பாளையம் சந்தை ரோடு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால், இந்த ரோடுவழியாக ஏராளமான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. குடியிருப்புகள், பள்ளிகள் உள்ள ரோடு என்பதால் பெரும் சிரமம் நிலவுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் செல்வபுரம் காலனி சிறப்பான பகுதியாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---
செல்வபுரம் காலனி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மகளிர்.
பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக ஊஞ்சல் விளையாடுகின்றனர்.
---
கவுதம் பிரசாந்த்
ரத்தினம்
---
செல்வபுரம் காலனியில் நடப்பட்ட மரக்கன்றுகள் விருட்சமாகியுள்ளன.
நடப்பட்டுள்ள மரக்கன்றுகள்
'சிசிடிவி'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
---------
செல்வபுரம் பிரதான வீதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பிற பகுதியினரும் இவற்றில் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.