/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்போர் குரல்: பசுமை விரிப்பு... குடியிருப்பின் சிறப்பு
/
குடியிருப்போர் குரல்: பசுமை விரிப்பு... குடியிருப்பின் சிறப்பு
குடியிருப்போர் குரல்: பசுமை விரிப்பு... குடியிருப்பின் சிறப்பு
குடியிருப்போர் குரல்: பசுமை விரிப்பு... குடியிருப்பின் சிறப்பு
ADDED : ஏப் 19, 2025 11:19 PM

திருப்பூரின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள, காந்தி நகர் பகுதியில் அவிநாசி ரோட்டிலிருந்து அங்கேரிபாளையம் ரோட்டை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஏ.வி.பி., லே-அவுட் பகுதி.
ஊராட்சி பகுதியாக இருந்து மாநகராட்சி விரிவாக்கத்தின் போது இணைக்கப்பட்ட பகுதியாக இப்பகுதி உள்ளது. இருப்பினும் ஊராட்சி பகுதியாக இருந்த காலத்திலேயே முறையாக திட்டமிடப்பட்டு மனைகள் பிரிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியாக இது அமைந்துள்ளது. இரண்டு பிரதான ரோடுகளை இணைக்கும் வகையிலான பகுதியாக இருந்தாலும், சுற்றுப் பகுதி முழுவதும் குடியிருப்புகள் மட்டுமே நிறைந்துள்ள அமைதி தவழும் பகுதியாக இது அமைந்துள்ளது. இந்த அமைதிக்குப் பின்னால் ஒரு இரைச்சல் மிக்க முன் கதை இருந்தது.
ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் துரை, செயலாளர் வெள்ளியங்கிரி, துணை தலைவர் நடராஜன் ஆகியோர் கூறியதாவது:
முக்கியமான பகுதிகளை இணைக்கும் மையமாக எங்கள் குடியிருப்பு பகுதி இருந்தது. இதனால், இப்பகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் கூட நடமாடுவதும், தேவையற்ற வகையில் சண்டை, சச்சரவு, தகராறும் சகஜமாக காணப்பட்டது. இதுதவிர, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இப்பிரச்னை பெரியளவில் தலை துாக்கியது.
பிரச்னைகளுக்கு தீர்வு
வெளிப்பகுதி நபர்களின் இந்த அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க, குடியிருப்போர் மத்தியில் ஒரு வித அச்சமான சூழ்நிலை நிலவியது. தனி நபராக இந்த கும்பலை தட்டிக் கேட்பதில் தயக்கம் காணப்பட்டது. அந்த சூழலில் தான், எங்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தை துவங்கினோம்.அதன் பின் இப்பகுதியினர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை இந்த சங்கம் துவங்கியது.
கடந்த, 2018ம் ஆண்டு முதல் இந்த அமைப்பை துவங்கி நடத்தி வருகிறோம். சங்கம் சார்பில், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற தேசிய நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்தோம். அதேபோல் பொங்கல் பண்டிகையும் உற்சாகத்துடன் சுற்றுப்பகுதியினரையும் அழைத்து வந்து கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சமத்துவ பொங்கல் வைத்தும், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்றும் கடந்த, 8 ஆண்டுகளாக சிறப்பான வகையில், முக்கிய பிரமுகர்கள் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து நடத்துகிறோம்.
30 இடங்களில்
'சிசிடிவி'
எங்கள் பகுதியில், எட்டு வீதிகளில், ஏறத்தாழ, 800 வீடுகள் உள்ளன. உள்ளன. சங்கம் சார்பில் வீதிகளுக்கு பெயர்ப் பலகை அமைக்கப்பட்டது. பாதுகாப்புக்காக 30 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தியுள்ளோம். இதன் பதிவுகள் சங்க அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகின்றன. அருகேயுள்ள பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளிக்கு சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டது.
பசுமை காக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நுழைவாயிலாக உள்ள பகுதியில் மதுக்கடை அமைக்கும் பணி துவங்கியது. கடந்த ஆட்சியின் போதும், நடப்பு ஆட்சியின் போதும் இரு முறை இப்பகுதியில் மதுக்கடை திறக்க நடந்த முயற்சியை கடுமையாக போராடி தடுத்து நிறுத்தினோம். இதற்காக எங்களுக்கு ஒத்துழைத்த மக்கள் பிரதிநிதிகளை என்றும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
------
திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் 4வது வீதியில் பாதாளச்சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டன. இவை சரிவர மூடப்படாமல் உள்ளன.
சிறுபாலம் பணி முடிந்த பின்னும் சாலை சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக உள்ளது.
சாலையோரம் வளர்ந்த மரங்களுடன் பசுமை நிறைந்து காணப்படும் ஏ.வி.பி., லே அவுட்.
ஏ.வி.பி., லே அவுட் பகுதியில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் துரை, செயலாளர் வெள்ளியங்கிரி, துணை தலைவர் நடராஜன்
-----