/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த நெருக்கடி கவனத்தை ஈர்க்க தீர்மானம்
/
அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த நெருக்கடி கவனத்தை ஈர்க்க தீர்மானம்
அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த நெருக்கடி கவனத்தை ஈர்க்க தீர்மானம்
அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த நெருக்கடி கவனத்தை ஈர்க்க தீர்மானம்
ADDED : அக் 06, 2025 11:10 PM
உடுமலை:அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 11ம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில், தீர்மானம் நிறைவேற்ற விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருதோடு, இரு மாவட்ட வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், அமராவதி சர்க்கரை ஆலை உள்ளிட்ட தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் பிரதானமாக உள்ளது.
ஆண்டு தோறும், 18 டி.எம்.சி., நீர் தேவை உள்ள நிலையில், தற்போதுள்ள அணை, 4 டி.எம்.சி., மட்டுமே கொள்ளளவு கொண்டதாகும்.
ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில் அணை நிரம்பினாலும், நீர் தேக்க முடியாமல், சராசரியாக, 10 டி.எம்.சி., நீருக்கு மேல் உபரியாக ஆற்றில் திறக்கப்படுகிறது.
அமராவதி அணை, 1957ல் கட்டப்பட்டபோது, கூடுதல் நீர் சேமிக்கும் வகையில், மேல் பகுதியில் அப்பர் அமராவதி அணை கட்ட திட்டமிட்டு, ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அப்பர் அமராவதி அணை கட்டப்படாமல், ஒவ்வொரு தேர்தலுக்கும், அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டும், ஜூலையில் அணை நிரம்பி, செப்., வரை உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், வேகமாக நீர்மட்டம் சரிந்து வருகிறது.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 11ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், மூலனுார், குண்டடம் தாலுகா உட்பட அமராவதி பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து கிராமங்களிலுள்ள விவசாயிகள்,பொதுமக்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.