/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருப்பெரிச்சலில் துணை மின் நிலையம் ரூ.4.08 கோடி நிலம் ஒதுக்கீடு
/
நெருப்பெரிச்சலில் துணை மின் நிலையம் ரூ.4.08 கோடி நிலம் ஒதுக்கீடு
நெருப்பெரிச்சலில் துணை மின் நிலையம் ரூ.4.08 கோடி நிலம் ஒதுக்கீடு
நெருப்பெரிச்சலில் துணை மின் நிலையம் ரூ.4.08 கோடி நிலம் ஒதுக்கீடு
ADDED : அக் 06, 2025 11:11 PM
திருப்பூர்:நெருப்பெரிச்சலில் துணை மின்நிலையம் அமைக்க 4.08 கோடி மதிப்புள்ள 1.33 ஏக்கர் நிலத்தை வழங்க வருவாய்த்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலம், பயன்பாட்டின் அடைப்படையில், நத்தம், மந்தை, கல்லாங்குத்து, ஓடை என, பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை நிலத்தை, அரசுத்துறைகள் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய, அரசிடம் முறையாக அனுமதி பெற்று, உரிய விலை நிர்ணயம் செய்து, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் கிரயம் செய்யப்படுகிறது.
திருப்பூர் வடக்கு தாலுகா, நெருப்பெரிச்சல் கிராமத்தில் அமைய உள்ள, துணை மின் நிலையத்துக்காக, வருவாய்த்துறை மூலம், 'கல்லாங்குத்து' புறம்போக்கு நிலத்தை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த, 2024ல் துவங்கிய இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத்தில் உள்ள, 571/1 என்ற எண்ணுள்ள, 3.91 எக்டர் நிலத்தில், 0.53 எக்டர் நிலத்தை (1.33 ஏக்கர்), மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் ஒப்படைக்க, வருவாய்த்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
''தற்போதைய நிலவழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், நான்கு கோடியே 8 லட்சத்து, 72 ஆயிரத்து, 150 ரூபாய் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நிலத்தை கிரயமாக மின்வாரியத்துக்கு வழங்கலாம்'' என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, 0.53.85 எக்டர் நிலம் ஒப்படைக்கப்படுகிறது. எந்த நோக்கத்துக்காக நில உரிமை மாற்றம் செய்யப்படுகிறதோ, அதற்காக மட்டுமே நிலத்தை பயன்படுத்த வேண்டும். நில உரிமை மாற்றம் தொடர்பாக அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். பெறப்படும் நிலத்தில், தேவையில்லாத பகுதியை மீண்டும் அரசுக்கே ஒப்படைக்க வேண்டும். புலத்தில், நீர்வழி புறம்போக்கு ஏதாவது இருந்தால், அதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தக்கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.