/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை இல்லாத மாநகராக மாற்றுவோம்: மேயர் உறுதி
/
குப்பை இல்லாத மாநகராக மாற்றுவோம்: மேயர் உறுதி
ADDED : அக் 06, 2025 11:12 PM
மாநகராட்சி கூட்டத்தில், மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:
தற்போது, 200 மெட்ரிக் டன் கழிவு மூலம் பயோ சி.என்.ஜி., உற்பத்தி மையம் அமைக்க இடம் உரிய வகையில் மாநகராட்சிக்கு பெறப்பட்டுள்ளது. விரைவில் இம்மையம் அமைக்கும் பணி துவங்கும். 18 ஏக்கர் நிலம் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் வகையில் பெறப்படவுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நுண் உர உற்பத்தி மையங்களில் கூடுதல் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு அதன் மேலும் 100 டன் அளவிலான குப்பைகள் கையாளப்படும்.திடக்கழிவு மேலாண்மையில் மாநகராட்சியின் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, அவற்றை முறையாக கடைப்பிடித்தும், அதைக் கண்காணித்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் இயக்கமாக இதை மாற்றுவோம். குப்பை இல்லாத மாநகராட்சியாக டிச., மாதத்துக்குள் திருப்பூர் மாறும்.
ஆக்கிரமிப்புகள் மீது தயக்கமின்றி அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏன் அச்சப்பட வேண்டும்? வளர்ச்சிப்பணிகள் குறித்து அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணி நிலவரம் குறித்து அறிக்கை தர வேண்டும். மாநகராட்சி மற்றும் மண்டல கூட்டங்களில் பங்கேற்காத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் நடக்கும் ஒரு நாளில் வந்து கவுன்சிலர்களுக்கு பதில் கூட தராமல் எந்த பெரிய வேலையையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு, மேயர் பேசினார்.
ரோட்டை சேதம் செய்தால்
நடவடிக்கை பாயும்'
''மாநகர ரோடுகளைப் பொறுத்தவரை சிறப்பு நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டப்பணிகளின் போது, ரோடு சேதப்படுத்தப்பட்டால், உரிய நிறுவனம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். சேதமான ரோட்டை சீரமைத்து அதற்கான தொகை, அந்த ஒப்பந்ததாரரிடம் பிடித்தம் செய்யப்படும். அதானி காஸ் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எந்த வரையறையுமின்றி மாநகராட்சி பகுதியில் பணிகள் செய்கின்றன. இப்பணியால் ரோடு, குழாய்கள் சேதமாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற பணிகளை மழைக்காலமாக உள்ளதால், எந்த தயக்கமும் இன்றி தடை செய்ய வேண்டும்.'' என்றார் மேயர்.
தெருநாய்களுக்கு
கருத்தடை மையங்கள்
மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை போன்ற பிற துறைகள் குறித்த பணிகள் நிலுவையில் இருந்தால் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தகவல் தர வேண்டும். பிரிவு வாரியாக அலுவலர்கள் தங்கள் பணி நிலவரம் குறித்த விவரங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தெருநாய்கள் கருத்தடை பணிக்காக மையங்கள் அமைக்க, இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் பணி துவங்கும்.
- அமித், மாநகராட்சி கமிஷனர்.