/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற் பயிரில் குலை நோய்த்தாக்குதல்; வேளாண்துறையினர் ஆய்வு
/
நெற் பயிரில் குலை நோய்த்தாக்குதல்; வேளாண்துறையினர் ஆய்வு
நெற் பயிரில் குலை நோய்த்தாக்குதல்; வேளாண்துறையினர் ஆய்வு
நெற் பயிரில் குலை நோய்த்தாக்குதல்; வேளாண்துறையினர் ஆய்வு
ADDED : ஏப் 02, 2025 10:18 PM

உடுமலை; அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ள நிலையில், வேளாண் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அமராவதி ஆயக்கட்டு பாசனம், மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் பகுதியில், ஏறத்தாழ, 1,300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில், நெற் பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாவட்ட கலெக்டர் தலைமையிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல், வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை விஞ்ஞானி துக்கையண்ணன், வேளாண் உதவி இயக்குனர் தேவி, அலுவலர்கள் பிரகாஷ், கோகுல் மற்றும் வேளாண் கல்லுாரி பயிற்சி மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது:
நெற் பயிரில் காணப்படும் குலை நோயினை கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு, டிரைசைகிளாஜோல் 75 சதவீதம், டபிள்யூ -பி., 120 கிராம் மருந்து தெளிக்க வேண்டும்.
விதைக்கும் போது, விதைகளை டி.விரிடி சூடோனமாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
வயலில் களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். நெற் பயிரில், தழைச்சத்து உரங்களை மண்ணின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் சாகுபடி தொழில் நுட்பங்கள், உரம் மற்றும் நோய் தாக்குதல் குறித்து, தங்கள் பகுதியிலுள்ள வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உரம், மருந்துக்கடைகளில் பரிந்துரை செய்யும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. மேலும், பயிர் மேலாண்மை, கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், பயிர் சுழற்சி முறையில் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.
மண்ணின் அங்கக கரிம சத்தினை அதிகரிக்க, தக்கை பூண்டு, சணப்பை போன்ற பசுந்தாழ் உரங்கள் பயிரிட்டு, சாகுபடிக்கு முன் மடக்கி உழ வேண்டும், என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.