/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம் :நோய் மேலாண்மை குறித்து அறிவுறுத்தல்
/
நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம் :நோய் மேலாண்மை குறித்து அறிவுறுத்தல்
நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம் :நோய் மேலாண்மை குறித்து அறிவுறுத்தல்
நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம் :நோய் மேலாண்மை குறித்து அறிவுறுத்தல்
ADDED : நவ 09, 2025 11:03 PM
உடுமலை: அமராவதி பாசன பகுதிகளில், நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், விதை நேர்த்தி, உரம், நோய், பூச்சி தாக்குதல் மேலாண்மை குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் நாற்றங்கால் மேலாண்மை குறித்து, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், கடத்துார், கணியூர், சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், காரத்தொழுவு, துங்காவி, பாப்பான்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில், அமராவதி புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு, 400 ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில், குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா பருவத்திற்கு நாற்றங்கால் தயாரிப்பு பணியிலும், புதிய ஆயக்கட்டு பகுதிகளில், சம்பா பருவ நெல் சாகுபடியிலும் விவசாயிக ள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் சாகுபடியில், சேற்று நாற்றங்கால் அல்லது பாய் நாற்றங்கால் வாயிலாக, நாற்று உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயந்திர நடவு மற்றும் நேரடி நடவு முறையில் நடவு செய்ய தயாராகி வருகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு, நாற்றங்கால் தயார் செய்யும் விவசாயிகள், 400 கிலோ தொழு உரம் இட்டு, 2 முறை புழுதி உழவு செய்து, பின் நீர் பாய்ச்சி சேற்று உழவு செய்து, 15 கிலோ டி.ஏ.பி., அல்லது யூரியா, 6 கிலோ, சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ இட்டு, 8 முதல் 10 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலம் கொண்ட வட்டப்பாத்தி அமைத்து, முளை கட்டிய விதைகளை பாத்தியின் மேல் சீராக விதைக்க வேண்டும்.
குறுகிய கால ரகங்களுக்கு, 20 கிலோ, மத்திய கால ரகங்களுக்கு, 15 கிலோ, நீண்ட கால ரகங்களுக்கு 12 கிலோ விதை தேவைப்படுகிறது.
விதைகளை விதை நேர்த்தி செய்ய, கார்பன்டாசிம் 2 கிராம், சூடோமோனாஸ், 10 கிராம், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து, பின் விதைக்க பயன்படுத்த வேண்டும்.
நாற்றங்கால் களை கட்டுப்பாட்டிற்கு, விதைத்த, 3 அல்லது 4 நாளில், பிரிட்லாக் லோர் மற்றும் சேபனர் 125 கிராம் ஏக்கருக்கு தெளிக்கலாம்.
அடுத்து, நாற்றங்கால் இலைப்பேன் தாக்குதல் தென்பட்டால், டை குளோர்வாஸ், 35 இசி., மருந்தை ஏக்கருக்கு, 30 மில்லி, பச்சை தத்துப்பூச்சி தென்பட்டால், கார்போ பூரன் 3 ஜி, 1.4 கிலோ, படைப்புழுவிற்கு, குளோர்பைரிபாஸ் 30 இசி, ஆகியவற்றை பயன்படுத்தி மாலை நேரத்தில் அடித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும், நாற்றங்கால் நோய்களான, குலை நோய்க்கு, டிரைசேக்ளோசோல் ஒரு கிராம், எடிபென்பாஸ் ஒரு மில்லி, கார்பன்டைசிம் 1 கிராம் என்ற அளவிலும், பழுப்பு புள்ளி நோய்க்கு, மேன்கோ ஜிப் 2 கிராம், எடிபென்பாஸ் 1 மில்லி என்ற அளவில் மருந்துகளை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தலாம்.
நாற்றங்காலில் முறையான உர மேலாண்மை, களை மேலாணமை, நீர் மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை செய்து, நல்ல, வளமான நாற்றுக்களை பெற்று,உரிய இடைவெளியில் வயலில் நட்டு, அதிக மகசூல் பெற வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

