/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வயல்களில் நெல் நாற்றங்கால் அமைப்பு; திருந்திய சாகுபடி முறையை பின்பற்ற அறிவுரை
/
வயல்களில் நெல் நாற்றங்கால் அமைப்பு; திருந்திய சாகுபடி முறையை பின்பற்ற அறிவுரை
வயல்களில் நெல் நாற்றங்கால் அமைப்பு; திருந்திய சாகுபடி முறையை பின்பற்ற அறிவுரை
வயல்களில் நெல் நாற்றங்கால் அமைப்பு; திருந்திய சாகுபடி முறையை பின்பற்ற அறிவுரை
ADDED : அக் 03, 2025 09:23 PM

உடுமலை; அமராவதி அணை பாசன பகுதிகளில், நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது; இந்த சீசனில், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
மடத்துக்குளம் பகுதியில், அமராவதி அணை, பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், பிரதான சாகுபடியாக நெல், கரும்பு உள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சீசனில், அமராவதி அணை நிரம்பியது; பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். நாற்று உற்பத்திக்காக ஆங்காங்கே நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில், மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் மட்டும், 7 ஆயிரம் ஏக்கர் வரை, நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், திருந்திய நெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் பின்பற்றுவதால் நன்மைகள் கிடைக்கும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது: சாதாரண நெல் சாகுபடி முறையில் இரண்டரை ஏக்கருக்கு தேவையான நாற்று உருவாக்க எட்டு சென்ட் இடம் தேவை. மேலும், 30 முதல் 40 கிலோ வரை விதை நெல் தேவைப்படும். தொழிலாளர்களை பயன்படுத்தி தான் நடவு செய்ய முடியும். களைகளை அப்புறப்படுத்தவும் தொழிலாளர்கள் தேவை அதிகமுள்ளது.
ஐந்து முதல் ஏழு நெல்மணி கொத்துகள் பிடித்து, ஐந்தரை டன் அளவுக்கே, நெல் அறுவடையாகும். ஆனால், திருந்திய நெல் சாகுபடி முறையில், நாற்றங்காலுக்கு ஒரு சென்ட் இடம், இரண்டு முதல் ஐந்து கிலோ விதை நெல் போதுமானது. இதில், இயந்திர நடவுக்கான பாய் நாற்றங்கால் உருவாக்கலாம்.
இந்த முறையில் உற்பத்தி செய்த நாற்றுகளை இயந்திரத்தில் வைத்து, விரைவாகவும், சீராகவும் நடவுசெய்யலாம்.
பயிர்கள் இடையில் உருவாகும் களைகளை 'கோனேவேட்டர்' இயந்திரத்தால் அழித்து, களைகளை உரமாக்கலாம்.
இம்முறையில், 35 துார்கள் வரை பிடித்து நாற்று ஊட்டத்துடன் வளரும். அறுவடைக்கும், இயந்திரங்கள் பயன்படுத்தலாம். இந்த சாகுபடியில், 40 சதவீதம் மகசூல் கூடுதலாக கிடைக்கும். எனவே, விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.