/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு நோய்கள் பரவும் அபாயம்
/
கால்நடைகளுக்கு நோய்கள் பரவும் அபாயம்
ADDED : ஆக 07, 2025 11:15 PM
திருப்பூர்; சுகாதாரமின்மை காரணமாக, கால்நடைகளுக்கு மடிவீக்க உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்று பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (கால்நடை மருத்துவ அறிவியல்) சுமித்ரா கூறினார்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை: மழைக்காலங்களில் கால்நடைகள், குடற்புழுக்களால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. குடற்புழுக்களால் பாதித்த கால்நடைகளுக்கு, தொடர் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், வயிறு பெருத்து காணப்படுவது மற்றும் அதிக நோய் தொற்று அறிகுறிகள் காணப்படும்.
இந்த பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க, மழைக்காலத்துக்கு முன்பும், மழைக்காலத்தின் போதும், சீரான இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். டாக்டர்களின் பரிந்துரைப்படி, சுழற்சி முறையில் குடற்புழு நீக்க மருந்தை தேர்வு செய்து, சரியான அளவில் கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில், புற ஒட்டுண்ணி களின் தாக்கமும் அதிகமாக காணப்படும்.
எனவே, கால்நடைகளுக்கு புற ஒட்டுண்ணிகளுக்கான சிகிச்சையும் அளிக்க வேண்டும். செம்மறி ஆடுகளுக்கு, மழைக்காலத்துக்கு முன்னரே, துள்ளுமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
ஈக்கள், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால், மழைக்காலங்களில் கொட்டகை பராமரிப்பும் மிகவும் முக்கியமாகிறது. சுகாதாரமின்மை காரணமாக, ஈ, கொசுக்கள் பெருகி, கால்நடைகளுக்கு தொல்லை தருவதோடு, மடி வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள் பரவவும் காரணமாகிறது.
எனவே, கொட்டகைகளில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வேளையில், நொச்சி அல்லது வேப்பிலை கொண்டு, புகை மூட்டம் போடுவதால், ஈ, கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.