/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர்களுக்கு இடையே குடியிருப்பு தொற்றுப்பரவல் அபாயம்
/
புதர்களுக்கு இடையே குடியிருப்பு தொற்றுப்பரவல் அபாயம்
புதர்களுக்கு இடையே குடியிருப்பு தொற்றுப்பரவல் அபாயம்
புதர்களுக்கு இடையே குடியிருப்பு தொற்றுப்பரவல் அபாயம்
ADDED : ஜன 05, 2025 02:23 AM

திருப்பூர்: புதர்மண்டிய பகுதிகளில், 'ஸ்க்ரப் டைபஸ்' என்ற பாக்டீரியா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் புதர்களுக்கு இடையே தான் குடியிருப்புகளே உள்ளன. எனவே, 'புதர் சூழ்ந்துள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு அடுத்து, 'ஸ்க்ரப் டைபஸ்' என்ற காய்ச்சல் பரவுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது, இந்த காய்ச்சல் ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
'கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இந்த பாதிப்புகள் உள்ளன' என தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை, புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். புதர் மண்டிய இடங்களுக்கு, அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் கடித்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் எனவும், பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
திருப்பூரில், கிராம, பேரூராட்சி பகுதிகளில், குடியிருப்புகளின் இடையே, காலியிடங்கள் அதிகளவில் உள்ளன. அவை, பெரும்பாலும் புதர்மண்டி தான் கிடக்கிறது.
சில இடங்களில், புதர்களில், பல்வேறு பூச்சிகள் இருக்கவும் வாய்ப்புண்டு. புதர்களை ஒட்டி தான் வீடு, கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன. சில இடங்களில் புதர்களையொட்டி தான் குடிநீர் குழாய்கள் கூட உள்ளன. இதனால், புல், புதர்களில் இருந்து வெளியேறும் பூச்சிகளால், மக்கள் கடிபடும் வாய்ப்புள்ளது.
எனவே,  உள்ளாட்சி நிர்வாகங்கள், புதர்மண்டியுள்ள இடங்களை சுத்தம் செய்து, மீண்டும், மீண்டும் புதர் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

