/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றங்கரை படித்துறைகள் பராமரிப்பு கண்டுகொள்ளாத துறையினர்
/
ஆற்றங்கரை படித்துறைகள் பராமரிப்பு கண்டுகொள்ளாத துறையினர்
ஆற்றங்கரை படித்துறைகள் பராமரிப்பு கண்டுகொள்ளாத துறையினர்
ஆற்றங்கரை படித்துறைகள் பராமரிப்பு கண்டுகொள்ளாத துறையினர்
ADDED : மே 26, 2025 11:02 PM
உடுமலை, ; அமராவதி ஆற்றின் வழியோரத்தில், மக்கள் பயன்படுத்தும் படித்துறைகள் பராமரிப்பு இல்லாமல், மாயமாகி வருவது குறித்து எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயம், குடிநீருக்கு அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆற்றின் கரையில், நுாற்றுக்கணக்கான கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராம மக்கள், ஆற்று தண்ணீரை எடுத்து செல்லவும், இதர தேவைகளுக்காகவும், முன்பு ஆற்றங்கரைகளில் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது, பெரும்பாலான படித்துறைகள் பராமரிப்பு இல்லாமல் மாயமாகி வருகிறது. உடுமலை ஒன்றியம் கல்லாபுரத்தில், முன்பு கிராமத்தின் முக்கிய மையமாக பராமரிக்கப்பட்டு வந்த படித்துறை, தற்போது பரிதாப நிலைக்கு மாறி விட்டது. எந்த தேவைக்கும் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
அமராவதி ஆற்றங்கரையில் செழித்திருந்த கிராமங்களுக்கும், ஆற்றுக்கும், முக்கிய இணைப்பு மையமாக படித்துறைகள் இருந்தன. கொழுமம், மடத்துக்குளம், கணியூர், கடத்துார் என பல பகுதிகளில், படித்துறைகள் பராமரிப்பின்றி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள பழமையான கோவில்களுக்கு வரும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிடட்ட பல்வேறு பணிகளுக்காக,அமராவதி ஆற்றுக்குச்செல்ல இந்த படித்துறைகளை பயன்படுத்துகின்றனர்.
சில இடங்களில் புதர் மண்டி, கற்கள் சரிந்து படித்துறை இருப்பதே தெரியாத நிலை உள்ளது. வெள்ளக்காலங்களில், ஆற்றின் நீரோட்டம் குறித்து தெரிந்து கொள்ளவும், படித்துறைகள் பயன்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்த படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என, இக்கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த படித்துறைகளை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் புதுப்பித்து மக்கள் அச்சத்தை தவிர்க்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.