/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை மறியல்; அரசு ஊழியர்கள் கைது
/
சாலை மறியல்; அரசு ஊழியர்கள் கைது
ADDED : ஜூன் 20, 2025 02:26 AM

திருப்பூர் : திருப்பூரில் நேற்று, வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழ்க்கைக்கான ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மறியல் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கடந்த காலத்தில், அரசு துறைகளில் பத்து ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரிந்தோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, காலமுறை ஊதியம் வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள், அரசு துறைகளில் தற்காலிக பணியாளராக சேர்ந்தால், நிரந்தரமாக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில், அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
கருணை காட்டுமாதமிழக அரசு?
புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 17,500 ரூபாயும், உதவியாளருக்கு 15,700 ரூபாயும் அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில், வி.ஏ.ஓ., உதவியாளர்களுக்கு, 15,700 ரூபாயும், ஊராட்சி செயலாளர்களுக்கு, 17,500 ரூபாயும் அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒடிசா, மணிப்பூர் மாநிலங்களில், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களுக்கு, அம்மாநில அரசுகள், காலமுறை ஊதியம் வழங்கியுள்ளன. போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு கூட, உணவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக, மாதம் 10,100 ரூபாய் வழங்கி கருணை காட்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மீதும் கருணை காட்டவேண்டும்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், வி.ஏ.ஓ., எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், குடும்ப நல ஆலோசகர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட அனைத்து துறைகளிலும், பத்து ஆண்டுகள் பணி நிறைவு செய்தோருக்கு, வாழ்க்கைக்கான ஊதியம் வழங்கவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்; கோஷங்கள் எழுப்பினர்.
கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதால், பெண்கள் 74 பேர்; ஆண்கள், 16 பேர் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர். அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.