/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர வசதி மையம் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்
/
சாலையோர வசதி மையம் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்
ADDED : அக் 24, 2025 12:16 AM
திருப்பூர்: பல்வேறு சரக்குகளை ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல, நீண்ட துாரம் தொடர்ந்து வாகனங்களை இயக்கும் டிரைவர், கிளீனர் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையில் 'லே பை' (ஓய்வு மையம்) அமைக்கப்படுகிறது. இதேபோல், மாநில நெடுஞ்சாலையில், தமிழகத்தில் ஏழு இடங்களில் சாலையோர வசதி மையம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதில் ஒரு மையம், அவிநாசி பழங்கரையில் அமைய உள்ளது.
இந்த மையத்தில், டிரைவர்களுக்கு ஓய்வறை, பெட்ரோல், டீசல், காற்று நிரப்பும் நிலையங்கள், வாகனங்களுக்கான அவசரகால மெக்கானிக் சேவை, முதலுதவி சிகிச்சை மையம், டீ கடை, மின்சார வாகனங்களுக்கான 'சார்ஜிங்' மையம், உணவகம், விரிவான கழிப்பிட வசதி, சிறுவர்கள் விளையாடும் பகுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை படிப்படியாக மேம்படுத்த, சாலையோர வசதி மையம் தனியார் பங்களிப்புடன், மாநில நெடுஞ்சாலையில் அமைக்க உள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு, தேவையான நிலம், தனியார் நிறுவனங்களுக்கு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்படும். அவ்விடத்தில் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி, சாலையோர வசதி மையம் அமைக்க வேண்டும். இதற்காக, ஆண்டுக்கு ஒரு முறை மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, அந்நிறுவனம் குத்தகை செலுத்த வேண்டி வரும்.
ஈரோடு - திருப்பூர் மாவட்ட வழித்தடத்தில், மாநில நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் பயணிக்கும் பகுதியாக பழங்கரை கண்டறியப்பட்டு, அவ்விடத்தில் சாலையோர வசதி மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் டிசம்பருக்கு முன்பாக துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

