/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல்மணிகள் பாதுகாப்பு மாவட்டத்தில் எப்படி?
/
நெல்மணிகள் பாதுகாப்பு மாவட்டத்தில் எப்படி?
ADDED : அக் 24, 2025 12:17 AM
திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டத்தில் உள்ளரங்க குடோன்களில் நெல்மணிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன'' என்று, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ரகுநாதன் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக, 20 லட்சம் டன் நெல் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்குப் போதுமான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படாததே இதற்குப் பிரதான காரணமாக அமைந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலைமை குறித்து விசாரித்ததில், டெல்டாவை போன்ற நிலை இங்கு ஏற்படாது என்று திட்டவட்டமாக அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் சார்பில், நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் நெல் அறுவடை செய்யப்படுகிறது; குறுவை பருவத்தில், 2,000 முதல், 3,000 டன் மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது என, துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடுமலை அமராவதி அணையை சார்ந்துள்ள மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசி, காங்கயம், பல்லடம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் நெல் சேமிப்பு மையங்கள் உள்ளன. குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நிர்வகிக்கப்படும், 9 குடோன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக நிர்வகிக்கப்படும், 10 குடோன்களில் நெல் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகள் வாயிலாக, மாதம், 12 ஆயிரம் டன் அரிசி வினியோகிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ரகுநாதன் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களை ஒப்பிடுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகக்குறைந்தளவு தான் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அவை, திறந்தவெளியில் அல்லாமல் உள்ளரங்க குடோன்களில் தான் சேமித்து வைக்கப்படுகிறது. தார்ப்பாய் போர்த்தப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. குடோன்களுக்கு வரும் நெல், உடனுக்குடன் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரிசியாக மாற்றி அனுப்பப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
கொள்முதல் நிலையம் விரைவில் திறப்பு கலெக்டரின் வழிகாட்டுதல் படி, மடத்துக்குளம் பகுதியில் இரண்டு, உடுமலையில் ஒன்று என, மொத்தம், 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன; விரைவில் செயல்பாட்டுக்கு வரும். - ரகுநாதன், மண்டல மேலாளர், மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகம்.

