ராக்கெட் வேகத்தில் எகிறும் கட்டுமானப் பொருட்கள் விலை: ஸ்தம்பிக்கும் கட்டுமானத் துறை
ராக்கெட் வேகத்தில் எகிறும் கட்டுமானப் பொருட்கள் விலை: ஸ்தம்பிக்கும் கட்டுமானத் துறை
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:34 PM

திருப்பூர்: கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கட்டுமானத் துறையினர், தொழிலாளர்கள் மட்டுமின்றி, சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ள பொதுமக்களும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
கட்டுமானப் பணிக்கு தேவையான மின்சாதனப் பொருட்களான ஒயர், சுவிட்ச், பி.வி.சி., பைப் உள்ளிட்டவற்றின் விலை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டைல்ஸ், சானிட்டரி பொருட்கள் 30 சதவீதமும், எம்--–சாண்ட், பி-–-சாண்ட், ஜல்லி, பெயின்ட் வகைகள் தலா 20 சதவீதமும், மர ஜன்னல், கதவுகள் 15 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளன.
இதனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மதிப்பீட்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் கூடுதல் நிதி ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையும், சிலர் கட்டுமானத்தை ஒத்திவைக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான கான்ட்ராக்டர்கள் கூறியதாவது:
ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.40 ஆயிரமாக இருந்த மின்சார ஒயர்களுக்கான செலவு, தற்போது ரூ.70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிளம்பிங் பொருட்கள் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும், நிலை, ஜன்னல், கதவு பணிகளுக்கான செலவு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
ஆயிரம் சதுரடி வீடு கட்டுவதில் இந்த மூன்று பணிகளுக்கான செலவு மட்டும் ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுதவிர சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையும், தொழிலாளர் கூலியும் அதிகரித்துள்ளன.
இந்திய கட்டுனர் சங்கத்தின் (பி.ஏ.ஐ.) திருப்பூர் முன்னாள் தலைவர் நாகராஜ் கூறியதாவது:
கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப மதிப்பீட்டை விட தற்போதைய செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட்ஜெட்டுக்குள் பணிகளை முடிப்பது சவாலாகியுள்ளது. இதனால் பணிகளில் காலதாமதம், கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதுடன், வாடிக்கையாளர்களுடன் கருத்து வேறுபாடும் உருவாகிறது.
கட்டுமான ஒப்பந்தங்களில் ‘விலை உயர்வு சரிசெய்தல்’ விதிமுறைகளை தெளிவாகப் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் கூலியும் கடந்த இரு ஆண்டுகளில் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலையில் தேவையற்ற உயர்வு உள்ளதா என்பதை அரசு கண்காணித்து, நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையினரின் கூடுதல் நிதிச்சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, நாகராஜ் கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகள்
“செய்ய வேண்டியது அதிகம்; அதையும் உடனே செய்க.”
