/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
/
சாலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 20, 2025 11:12 PM
திருப்பூர்; திருப்பூரில் ரோடு பணிகளுக்கு, 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பருக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதி 160 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. மாநகரப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் துறையின் கீழ் முக்கியமான ரோடுகள் அமைந்துள்ளன.
நகரின் முக்கிய ரோடுகள், வீதிகள், தெருக்கள், சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு இணைப்பு ரோடுகள் ஆகியன மாநகராட்சி சார்பில் அமைத்து பரா மரிக்கப்பட்டு வருகிறது.நகரில் உள்ள பெரும்பாலான ரோடுகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், காஸ் குழாய் பதிப்பு திட்டம், தனியார் கேபிள் பதிப்பு பணி போன்ற பணிகளுக்கு குழி தோண்டி சேதமாகியுள்ளது.
இதுபோன்ற ரோடுகளை சீரமைப்பு செய்யவும், பல பகுதிகளில் புதிய ரோடுகள் அமைக்கவும், மெட்டல் ரோடு மற்றும் மண் ரோடுகள் தார் ரோடாக மாற்றவும் திட்டமிடப்பட்டது.திட்டமிடப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட ரோடு பணிகளுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு பெற்று, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மொத்தம் 1,750 கி.மீ., நீளத்தில் ரோடுகள் சீரமைப்பு மற்றும் புதிய ரோடு அமைக்க, 125 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி பெற்று, ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆலோசனை
இப்பணிகள் துவங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. கமிஷனர் அமித் தலைமை வகித்தார். துணை கமிஷனர் சுந்தரராஜன், முதன்மை பொறியாளர் முகமது சபியுல்லா முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி பொறியியல் பிரிவினர், ஒப்பந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். ரோடு பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் உடனடியாகப் பணிகளைத் துவங்கி, தரமான வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வரும் செப்., மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும். நிர்வாகத் தரப்பில் உரிய ஒத்துழைப்பு வழங்கவும், பொறியியல் பிரிவினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெறும் ரோடு பணிகளை தினமும் நேரில் சென்று ஆய்வு செய்து, நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.