/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
/
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
ADDED : ஜன 07, 2025 07:23 AM

திருப்பூர்; மத்திய உணவு பாதுகாப்புத்துறை, ரயில்வே துறையின் பேரில் போலி பணி ஆணை தயாரித்து மோசடி செய்துவரும் திருப்பூர் பயிற்சி மையம் மீது நடவடிக்கை எடுக்ககோரி, இளைஞர்கள் இருவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தேனியை சேர்ந்த பால்பாண்டி மகன் மோகன்தாஸ், 28; விருதுநகரை சேர்ந்த வெயில்முத்து, 25 ஆகிய இருவரும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்; மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பயிற்சி மையத்தினர் குறித்து புகார் அளித்தனர்.
இது குறித்து, மோகன்தாஸ் கூறியதாவது:
திருப்பூர், செவந்தாம் பாளையத்தில், குபேந்திரன் என்பவர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். தன்னை முன்னாள் எல்லை பாதுகாப்பு அதிகாரி எனவும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பு உள்ளதால், உடனடியாக அரசு பணி பெற்றுத்தருவதாகவும் கூறினார். இதனையடுத்து, 2020ல், 35 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி மையத்தில் சேர்ந்தோம்.
என்னுடன், 30க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர். மூன்று மாத பயிற்சிக்குப்பின், மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டனர். கடந்த 2021, மார்ச்சில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ பரிசோ தனையும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், பெராஸ்பூரில், உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பயிற்சி எனக்கூறி, அங்குள்ள குடோனில் காவலாளியாக பணிபுரியச் செய்தனர். அதன்பின், உணவு பாதுகாப்புத்துறையின் லோகோ, அரசு முத்திரையுடன் போலியாக நியமன கடிதம் தயாரித்து அனுப்பியிருந்தனர்.
இதுபோலவே, வெயில்முத்துவுக்கு, ரயில்வே துறையின் நியமன ஆணையை போலியாக தயாரித்து அனுப்பியிருந்தனர். இதுகுறித்து குபேந்திரனிடம் கேட்டபோது, 'நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுப்பதாக,' தெரிவித்தார். மொத்தம், 5.50 லட்சம் ரூபாய்க்கு செக் வழங்கினார்.
அந்த 'செக்' பணமில்லாமல் திரும்பியது. இந்நிலையில் பத்திரிகை நிருபர் என கூறி அறிமுகமான செல்வம் என்பவர், குபேந்திரனிடமிருந்து எங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதாக கூறி, 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி வருகிறார்.
எங்களைப்போல் ஏராளமான இளைஞர்களை, மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, பயிற்சி மையத்தினர் ஏமாற்றியுள்ளனர். எனவே, போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்துவருவோர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.