/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாக்டர், இன்ஜினியரிடம் ரூ.2.44 கோடி சுருட்டல்
/
டாக்டர், இன்ஜினியரிடம் ரூ.2.44 கோடி சுருட்டல்
ADDED : பிப் 15, 2024 02:44 AM
திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்தவர், 44 வயது பெண் டாக்டர். இவரது கணவரும் டாக்டர். பெண் டாக்டர் சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில், பங்கு வர்த்தகம் தொடர்பான சில விளம்பரங்களை பார்த்தார். குறைந்த முதலீடுக்கு, அதிக லாபம் கிடைக்கும் என அதில் தகவல் இடம் பெற்றிருந்தது.
டாக்டர், அந்த 'லிங்க்' உள்ளே சென்று, அதில் கேட்டிருந்த தகவல்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டார். அந்த பெண் டாக்டரை, 'வாட்ஸாப்' குழுவில் இணைத்தனர். பல கட்டங்களாக பணத்தை முதலீடு செய்தார். முதலீட்டைக் காட்டிலும் அதிக லாபம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
லாப பணத்தை எடுக்க முயன்ற போது, சில வரிகளை கட்ட வேண்டும் என கூறி, மேலும் தொகையை முதலீடு செய்ய வைத்து, 1.73 கோடி ரூபாயை சுருட்டினர். பின் தான், இது மோசடி கும்பலால் நடத்தப்பட்ட செயலி என்பது தெரிந்தது.
அதுபோல, திருப்பூரைச் சேர்ந்த, 70 வயது ஓய்வுபெற்ற இன்ஜினியர் ஒருவரும் இதே போன்ற செயலியில், ஓய்வு தொகை, சேமிப்பு பணம் என, 71 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். மோசடி கும்பல் பணத்தை சுருட்டியது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், படிக்காதவர்களைவிட படித்தவர்களே ஏமாறுவது வேதனையான ஒன்று. பேராசையால் நீண்ட கால சேமிப்பை இழக்கும் நிலை நேரிடுகிறது.
இரு மோசடி வழக்கிலும், ஆரம்பத்தில் முதலீடு செய்யும் சிறிய தொகைக்கு அதிக லாபம் வருவதை போன்று நம்மை நம்ப வைத்து, பணத்தை எடுக்க முடியாத வகையில், மேலும் முதலீடு செய்ய வைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இரு வழக்கிலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு, அதிலிருந்து 'கிரிப்டோ கரன்சி'யாக்கி, பணத்தை சுருட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

