/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிமுறை மாற்றம்! பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகும்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிமுறை மாற்றம்! பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிமுறை மாற்றம்! பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிமுறை மாற்றம்! பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகும்
ADDED : ஏப் 24, 2025 06:14 AM

உடுமலை : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணியாளர்களை நடப்பாண்டு தேர்வுசெய்வதற்கான விதிமுறைகள், ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,திட்டத்தில் பயன்பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட, 72 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நுாறு நாட்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது.தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒரு நாளுக்கு, 300 ரூபாய் வீதம் இப்பணியாளர்களுக்கான சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றியத்தில் மொத்தமாக, 61 தொகுப்புகள் உள்ளன.
கடந்தாண்டு வரை சராசரியாக, ஒரு தொகுப்புக்கு நுாறு பேர் வீதம் பணியாளர்கள் தேர்வு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ப பணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
விளைநிலங்களில் வரப்பு அமைத்தல், பாத்தி காட்டுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளும் திட்டத்தில் வழங்கப்பட்டன.
பாசன சீசன்களின் போது, மண் கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளும், மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடப்பாண்டு பணிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு குறித்து ஊரக வளர்ச்சித்துறைக்கு பல்வேறு விதிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி உடுமலை ஒன்றியத்தில், ஒரு தொகுப்புக்கு, அதிகபட்சம், 21 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு தொகுப்பில், பல ஊராட்சிகள் உள்ள நிலையில், வேலை பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.
அதிலும், கடந்தாண்டு ஒதுக்கீடு நாட்களில், 70 சதவீதம் வரை பணியாற்றியவர்களுக்கு, மீதமுள்ள பணி நாட்களை நிறைவு செய்யும் வகையில், பணியாளர்கள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், அரசு கட்டடங்கள் பராமரித்தல், குளம் அமைத்தல், துார்வாருதல், கிளை கால்வாய்கள் துார்வாருதல், சாலையோரத்தில் மரக்கன்று நடுதல், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல், உள்ளிட்ட பணிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.
சிறப்பு பணிகளாக கிராமங்களில் 'பேவர் பிளாக்' ரோடு போடுதல், தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.