ADDED : ஜூலை 04, 2025 11:17 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரின் கட்டப் பஞ்சாயத்து போன்ற அராஜக நடவடிக்கைகளால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர், என பா.ஜ., சார்பில் திருப்பூர் எஸ்.பி.,யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் இடம் அளித்த மனு விவரம்:
குண்டடம் பகுதியில் பண விவகாரத்தில் தி.மு.க., வினர் மிரட்டல் விடுத்ததால், செல்வானந்தம் என்பவர் வாழ முடியாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு காரணமானோர் ஆளும் கட்சியினர் என்பதால் இந்த வழக்கில் முறையான விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நியாயமான நேர்மையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் பல பகுதிகளிலும் ஆளும் கட்சியினர் இது போன்ற கட்டப் பஞ்சாயத்து நடத்துகின்றனர். மக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர், பல்லடம் பகுதிகளில் சட்டத்தை மீறி, வங்க தேசத்தினர், போலி ஆவணங்கள் மூலம் தங்கியுள்ளனர். ஏற்கனவே ஏராளமானோர் பிடிபட்ட நிலையில், சமீபத்தில், 26 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலி ஆவணங்கள் இருப்பது இது போன்ற ஊடுருவல்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாக கருத வேண்டியுள்ளது.
இதுபோன்ற நபர்களை போலி ஆவணங்களுடன் இங்கு அழைத்து வந்து வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆயிரக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு இவர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள், இரண்டொரு மாதத்தில் அவர்கள் விலகினாலும் பொறுப்பேற்பதில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் தங்கியுள்ள வெளி மாநில, வெளி நாட்டினர் குறித்த விவரங்களை திரட்டும் பணி கைவிடப்பட்டு விட்டது. போலீசார், வருவாய்த்துறை, தொழில் துறையினர் இணைந்து மீண்டும் இதனை மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் பற்றாக்குறையால் தவிக்கும் நிறுவனங்கள், முறையான ஆவணங்கள், விவரங்கள் இல்லாத ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.