/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு
/
ஊரக திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு
ADDED : ஜன 30, 2025 11:51 PM
திருப்பூர்: நாளை (பிப்., 1ம் தேதி) நடக்க இருந்த ஊரக திறனாய்வு தேர்வு இரண்டாது முறை ஒத்திவைக்கப்பட்டு, 8ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேர்வு குறித்த அறிவிப்பு கடந்தாண்டு வெளியாகி, டிச., 14ம் தேதி தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெஞ்சல் புயல் கனமழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பிப்., 1ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குனரகம் இரண்டாவது முறையாக தேர்வை ஒத்திவைத்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை தரப்பில் இருந்து அனுப்பியுள்ள கடிதத்தில்,'பிப்., 3ம் தேதி வரை திருச்சி, மணப்பாறையில் பாரத சாரணியர் இயக்க வைர விழா நடப்பதால், இதில் பங்கேற்கும் மாணவர் நலன் கருதி, ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
வரும், 8ம் தேதி இத்தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் பிப்., 3 முதல் ஹால்டிக்கெட்டை தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

