/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக துாய்மை பணியாளருக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கணும்!
/
ஊரக துாய்மை பணியாளருக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கணும்!
ஊரக துாய்மை பணியாளருக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கணும்!
ஊரக துாய்மை பணியாளருக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கணும்!
ADDED : ஆக 20, 2025 01:11 AM

திருப்பூர்; ''ஊரகப்பகுதியில், துாய்மை பணியாளர் மாத சம்பளம், 7,500 ரூபாயாக உயர்த்தி கொடுக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என, நலவாரிய தலைவர்ஆறுச்சாமி பேசினார்.
துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை மற்றும் நல உதவி வழங்கும் விழா, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, நலவாரிய துணை தலைவர் கனிமொழி, உறுப்பினர் மோகன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது:
கொரோனா காலத்தில், அனைவரும் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்ட நிலையிலும், மக்களுக்காக வீதியில் இறங்கி பணியாற்றியவர்கள் துாய்மை பணியாளர்கள்.
துாய்மை பணியின் மூலமாக, சமூகத்தை சுத்தப்படுத்தும் நீங்கள், உங்கள் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அரசு வழங்கும், கையுறை, முககவசம், காலுறைகளை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும்; உங்களை முதலில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நலவாரியத்துக்கு, ஆண்டுதோறும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதுவரை, 4.37 கோடிக்கு நல உதவி வழங்கியுள்ளோம். நிதி கையிருப்பாக, 40 கோடி ரூபாய் இருக்கிறது; துாய்மை பணியாளருக்கு தேவையான உதவியை செய்ய முடியும். இந்தவாரியம் உங்களுக்கானது; பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஊரகப்பகுதியில், துாய்மை பணியாளர் மாத சம்பளம், 5,000 ரூபாயாக இருப்பதை, 7,500 ரூபாயாக உயர்த்தி கொடுக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உங்கள் தொழில், உங்களுடன் போகட்டும்; உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.
கல்வியால் மட்டுமே சமுதாயமும், மக்களும் உயர முடியும். திருப்பூர் மாவட்டத்திலும், துாய்மை பணியாளருக்காக மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
துாய்மை பணியாளர், பணியின் போது இறந்தால், ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் என்பது, 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடில்லா ஏழைகளுக்கு, 30 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். சென்னை போல, அனைத்து மாவட்டங்களிலும், துாய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். வாரியத்தில், 3.20 லட்சம் பேர், உறுப்பினாக உள்ளனர். ஓட்டல், தொழிற்சாலை, மருத்துவமனை துாய்மை பணியாளரும் வாரியத்தில் இணைய முன்வரலாம்; நலவாரிய உறுப்பின் குழந்தைகள் வெளிநாடு சென்று பயில, நிதியுதவி வழங்கப்படும்
- ஆறுச்சாமி,
நல வாரிய தலைவர்.