/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உலக அமைதிக்கு வழிகாட்டும் சைவ சமயம்'
/
'உலக அமைதிக்கு வழிகாட்டும் சைவ சமயம்'
ADDED : ஜூலை 08, 2025 11:56 PM

திருப்பூர்; 'வழிபாட்டின் அடித்தளமே அன்புதான் என்கிற, சைவ சமயம் கூறும் உண்மை புரிந்தால், உலகம் அமைதியாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கும்' என, சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.
திருப்பூர், யுனிவர்சல் ரோடு, ஹார்வி குமார சாமி மண்டபத்தில், கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை, திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
மாணிக்கவாசகரின் வரலாற்றை கூறும் திருவாதவூரடிகள் புராணம் குறித்து, சைவ சித்தாந்த ஆசிரியர், சிவசண்முகம் பேசியதாவது:
திருப்பெருந்துறையில், மற்ற சிவகணங்களோடு வந்து வீற்றிருந்த மாணிக்கவாசகர், சுவாமியை நினைத்து திருவாசகத்தின் பல பதிகங்களை, மனம் உருகி பாடினார்.
அதிசயப் பத்து, அற்புதப் பத்து, சென்னிப்பத்து, குழைத்த பத்து என, பாடினார். பின்னர், நாம் மார்கழி மாதந்தோறும் காலையில், பெருமானை கோவிலில் சென்று வழிபடும்போது பாடுகின்ற, திருப்பள்ளி எழுச்சியை பாடினார்.
ஏற்கனவே சுவாமிகள் சொன்னதுபோலவே, அங்கிருந்த பொய்கையில் ஒரு ஜோதி வந்தது. சிவகணங்கள் எல்லோரும், அந்த ஜோதியில் கலந்து, கையிலையிலே, சிவபெருமானின் திருவடியை சென்று அடைத்துவிட்டனர்.
மாணிக்கவாசகர் மட்டும், சுவாமியின் உத்தரவுப்படி, சில காலம் திருப்பெருந்துறையிலேயே தங்கியிருந்தார்.
மாணிக்கவாசகர் என்கிற ஒரு ஆன்மா மீது, சுவாமிக்கு இருக்கின்ற அன்பினை, திருவாசகம் முழுவதும் நாம் பார்க்கலாம். வழிபாட்டின் அடித்தளமே அன்புதான் என்கிறது, சைவ சமயம். இந்த உண்மை தெரிந்தால், உலகம் முழுவதும் நல்லிணக்கம் வளரும். மக்கள், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்வாரேயானால், உலகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டு, உத்தரகோச மங்கைக்கு சென்ற மாணிக்கவாசகர், நீத்தல் விண்ணப்பம் பாடுகிறார்; இது மிகவும் உருக்கமான பகுதி.
ஒவ்வொரு பாடலிலும், பெருமானே என்னை விட்டு விடாதே என்று, கெஞ்சி பாடினார். மிகவும் அற்புதமான இந்த பதிகங்களை அனைவரும் வீட்டில் பாட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.