/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
130 டன் விதை நெல் விற்பனைக்கு தடை
/
130 டன் விதை நெல் விற்பனைக்கு தடை
ADDED : ஆக 30, 2025 01:11 AM
திருப்பூர்; தாராபுரத்தில், 130 மெட்ரிக் டன் விதை நெல் 'உரிய தரம் இல்லை' எனக் கூறி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தின் விதை நெல் களஞ்சியமாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உள்ளது. தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களுக்கு இங்கு உற்பத்தியாகும் விதை நெல்தான் பயன்படுத்தப்படுகிறது. எழுபது சதவீதத்துக்கும் மேற்பட்ட நெல் விதைகள் இங்கு தான் உற்பத்தியாகின்றன.
இங்கு 40க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிறுவனங்களும், 130க்கும் மேற்பட்ட விதை நெல் விற்பனை மையங்களும் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் 75 ஆயிரம் ெமட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட விதை நெல் கையாளப்படுகிறது. உரிய ஆய்வுக்குப் பின் சான்றிதழ் வழங்கப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
இங்குள்ள விதை நெல் விற்பனை மையங்களில் ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில் முளைப்புத்திறன், புறத்துாய்மை, இனத்துாய்மை, விதை நலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில், 130 மெட்ரிக் டன் எடையுள்ள 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதை நெல், உரிய தரத்துடன் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், பட்டியல் விவரங்களை முறையாகப் பராமரிக்கவும் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.