/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோரா சேலைகள் விற்பனை 'டல்'; நெசவாளர்கள் பாதிப்பு
/
கோரா சேலைகள் விற்பனை 'டல்'; நெசவாளர்கள் பாதிப்பு
ADDED : மே 13, 2025 12:58 AM
உடுமலை : கோடை துவங்கியதும், கோரா சேலைகளுக்கு விற்பனை தேக்கமடைவதால், உடுமலை சுற்றுப்பகுதி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை ஒன்றியம் மலையாண்டிபட்டணத்தில், 300க்கும் அதிகமான குடும்பங்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. மேலும் பாப்பான்குளம், குரல்குட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் நெசவுத்தொழில்தான் பிரதானமாக உள்ளது.
பட்டு, கோரா, கோட்டா என பலவிதமான சேலைகளை நெசவு செய்து வருகின்றனர். தனியார் விற்பனையாளர்கள் வாயிலாக, இவர்களுக்கான 'ஆர்டர்'கள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து பட்டு நுால் விலையில் ஏற்றம் போன்ற காரணங்களால், கோட்டா, கோரா ரக சேலைகளை நெசவு செய்வோர் தற்போது அதிகரித்துள்ளனர்.
இங்கு நெசவு செய்யப்படும் சேலைகள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு தனியார் விற்பனையாளர்கள் விற்பனைக்கு எடுத்துச்செல்கின்றனர். கோரா சேலைகளுக்கு, 900 ரூபாயும், கோட்டா சேலைகளுக்கு 850 ரூபாயும் வழங்கப்படுகின்றன.
கோடை துவங்கியும் கோரா சேலைகளுக்கு பெரிதான வரவேற்பில்லை. இதனால் சேலைகளை எடுத்துச்செல்லும் மொத்த வியாபாரிகள், நெசவாளர்களுக்கு தொகை வழங்குவதில் தாமதப்படுத்துகின்றனர். இதனால், நெசவாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆர்டர் கொடுத்த சேலைகளையும் பெற்றுச்செல்லாமல் தேக்கத்தில் வைத்துள்ளனர்.
இதனால் சேலைகளை இருப்பது வைத்துள்ளதுடன், தங்களின் உழைப்பிற்கான தொகை பெற முடியாமல் நெசவாளர்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.