/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரப்பணி மக்கள் இயக்கமாகிறது! குப்பை மேலாண்மையில் மாநகராட்சி சுறுசுறுப்பு
/
சுகாதாரப்பணி மக்கள் இயக்கமாகிறது! குப்பை மேலாண்மையில் மாநகராட்சி சுறுசுறுப்பு
சுகாதாரப்பணி மக்கள் இயக்கமாகிறது! குப்பை மேலாண்மையில் மாநகராட்சி சுறுசுறுப்பு
சுகாதாரப்பணி மக்கள் இயக்கமாகிறது! குப்பை மேலாண்மையில் மாநகராட்சி சுறுசுறுப்பு
ADDED : நவ 06, 2025 04:51 AM

திருப்பூர்: மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது உள்ளிட்ட சுகாதார பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது.
மாநிலத்தில் பாலிதீன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், பாலிதீன் வகையறாக்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு தொடர்பான பணிகளை ஊக்குவித்து, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நோக்கில், 'தமிழ்நாடு கழிவு மேலாண்மை சங்கம்' உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தினர் மாநிலம் முழுக்க, ஆங்காங்கே செயல்பட்டு வரும், பாலிதீன் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து, அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல் படுத்தும் முயற்சியை மேற் கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையத்தில், வீணாக வீசியெறியப்படும் பாலிதீன் பொருட்களை சேகரித்து அவற்றை, சிமென்ட் நிறுவனங்களின் எரிபொருள் தேவைக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொண்டு வரும் நிறுவனத்தில், திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் பணி மேற்கொள்வது தொடர்பான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிறுவன உரிமையாளர் வேல்முருகன் வர வேற்றார். மேயர் தினேஷ்குமார், துவக்கி வைத்தார். தமிழ்நாடு கழிவு மேலாண்மை சங்க செயலாளர் வீரபத்மன், பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட தன்னார்வ அமைப்பினர் பலரும் பங்கேற்றனர்.
கட்டமைப்பில் உதவி நகராட்சி நிர்வாகங்களின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் முருகேசன் கூறியதாவது:
தினசரி, 100 கிலோ பாலிதீன் உட்பட குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் (பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்), தாங்கள் வெளியேற்றும் குப் பையை, தாங்களே மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு உதவும் நோக்கிலும், அவர்கள் வெளியேற்றும் பாலிதின் பை உள்ளிட்ட பொருட்களை இந்நிறுவனத்திற்கு வழங்கினால், அவற்றை தரம் பிரித்து, 'பண்டல்' செய்து, சிமென்ட் நிறுவனங்களுக்கு எரிபொருள் தேவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனர் மகேஷ்வரி கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, 'நிலையான செயல்பாட்டு செயல் முறை' (எஸ்.ஓ.பி.,) தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநகரில், 2.45 லட்சம் வீடுகள், 40 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
வீடுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்'களிடம் இருந்து பெறும் குப்பையை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணி, கோழி, மீன் இறைச்சிக் கழிவுகளை, உரமாக மாற்றும் பணிகளை, தனியார் ஏஜன்ஸி வாயிலாக மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சி வெற்றி பெற, அவரவர் வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுப்பது அவசியம். அதாவது, திடக்கழிவு மேலாண்மை பணி, மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் தன்னார்வ அமைப்பினரை ஈடுபடுத்த உள்ளோம்.
'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' களை கணக்கெடுத்து, ஒவ்வொரு நிறுவனத்தினரும் தினசரி வெளியேற்றும் பாலிதீன் குப்பையின் அளவை கணக்கெடுக்க உள்ளோம். மாநகராட்சியில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் ஈடுபட துவங்கிவிட்டனர். குப்பை மேலாண்மை தொடர்பான இத்திட்டங்களை, ஒரு மாதத்தில் அமலுக்கு வரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

