/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்! ஒன்றிய கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
/
சேவூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்! ஒன்றிய கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
சேவூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்! ஒன்றிய கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
சேவூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்! ஒன்றிய கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜன 04, 2025 12:14 AM

அவிநாசி; அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் (பொறுப்பு) பிரசாத்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர்கள் ரமேஷ்குமார் (பொது), விஜயகுமார் (ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் 310 சதுர கிலோமீட்டர் அளவில் 31 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. அவிநாசி கிழக்கு, மேற்கு மற்றும் சேவூர் என மூன்று வருவாய் பிர்காக்களை கொண்டுள்ளது. பெரிய ஊராட்சி ஒன்றியமாக இருப்பதால், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் வளர்ச்சி திட்ட மானியத் தொகைகள் போதுமானதாக இல்லை.
நிர்வாக வசதிக்காகவும் அதிகாரிகளின் அலுவலக பணிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அவிநாசி ஒன்றிய பகுதியினை இரண்டாகப் பிரித்து சேவூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவ்வகையில், பொங்கலுார், ஆலத்துார், கானுார், மங்கரசுவளையபாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம் பாளையம், குட்டகம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், சேவூர், புலிப்பார், தத்தனூர். புஞ்சை தாமரை குளம், வடுகபாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை உள்ளடக்கி சேவூரை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக கவுன்சிலர்கள் பேசியதாவது:
சேது மாதவன் (தி.மு.க.,): அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில், பழங்கரை, மொத்தம் 16 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட ஊராட்சியாக உள்ளது. இதனை இரண்டாக பிரித்து பெரியாயிபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி ஊராட்சி உருவாக்கி தர வேண்டும்.
பெரியாயிபாளையம் பகுதியில் உள்ள மூன்று வார்டுகளில் மட்டும் 5,600 வாக்காளர்கள் உள்ளனர். எனவே பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும் அல்லது அவிநாசி நகராட்சியுடன் இணைத்து தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும்.
முத்துச்சாமி (மா.கம்யூ.,): அவிநாசி ஒன்றியத்திலுள்ள, 31 ஊராட்சிகளில் ஒவ்வொன்றாக நடைபெறும் பணிகளை பி.டி.ஓ., மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது என்பது தற்போதைய காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது. நிதி ஆதாரம் போதுமானதாக இல்லை.
தற்போது சேவூரை புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கினால், அனைத்து பகுதிகளுக்கும் நிதிகள் சுலபமாக கிடைக்கும். பணிகள் விரைந்து நடக்கும். புதிய ஊராட்சி ஒன்றியம் துவங்குவதற்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.

