/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.பி., திடீர் இடமாற்றம்: பின்னணி என்ன?
/
எஸ்.பி., திடீர் இடமாற்றம்: பின்னணி என்ன?
ADDED : ஜன 28, 2024 08:51 PM
உடுமலை;திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் சென்னை லஞ்ச ஒழிப்பு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் எஸ்.பி.,யாக இருந்த சாமிநாதன், சென்னையில் தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறைக்கும், அந்த இடத்துக்கு, திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் ராஜராஜன், திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம், எஸ்.பி., சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தார். ஒன்பது மாதத்துக்குள் எஸ்.பி., திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
என்ன காரணம்?
கடந்த சில மாதங்களாக மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்., மாதம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில், நான்கு பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த மாதம், அவிநாசி டி.எஸ்.பி.,யின் டிரைவர், அதிகாரியின் சொந்த வேலைக்காக ஆட்டோவில் சென்ற போது, விருதுநகர் அருகே விபத்துக்குள்ளாகி இறந்தார். முறையாக எஸ்.பி., விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கம்யூ., உட்பட பலரும் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த வாரம், பல்லடத்தில், டிவி நிருபர் ஒருவரை கும்பல் ஒன்று, கொடூரமாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியது.
இதுதவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் கொலை, கொள்ளை போன்ற தொடர் குற்ற சம்பவங்களால், சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் தரப்பில் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.
இந்த காரணங்களால், எஸ்.பி., சாமிநாதனை மாற்றம் செய்து, சட்டம்-ஒழுங்கு, குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், நேரிடை ஐ.பி.எஸ்., அதிகாரியான அபிஷேக் குப்தாவை நியமித்துள்ளனர்.