/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் சார் ஆராய்ச்சிப்படிப்புகள் மாணவரிடம் பெருகட்டும் ஆர்வம்; விதைகள் விருட்சமாகும்
/
அறிவியல் சார் ஆராய்ச்சிப்படிப்புகள் மாணவரிடம் பெருகட்டும் ஆர்வம்; விதைகள் விருட்சமாகும்
அறிவியல் சார் ஆராய்ச்சிப்படிப்புகள் மாணவரிடம் பெருகட்டும் ஆர்வம்; விதைகள் விருட்சமாகும்
அறிவியல் சார் ஆராய்ச்சிப்படிப்புகள் மாணவரிடம் பெருகட்டும் ஆர்வம்; விதைகள் விருட்சமாகும்
ADDED : ஆக 22, 2025 11:55 PM

மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் பணியை, கடந்த, 15 ஆண்டாக மேற்கொண்டு வருகிறோம். அறிவியல் தினம் தொடர்பான நாட்களில், சந்திரயான் மாதிரி வடிவமைப்பு, போஸ்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்துகிறோம். இந்நிகழ்வில், 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாணவ, மாணவியர் மத்தியில் பேசுகின்றனர். விழிப்புணர்வின் பயனாக, அறிவியல் சார் ஆராய்ச்சி படிப்புகளை சில மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.இருப்பினும், விண்வெளி அறிவியல் சார்ந்த உயர்கல்வியை தேர்வு செய்வதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் 'இஸ்ரோ' உள்ளிட்ட அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் பணி ஓய்வு பெறும் போது, விஞ்ஞானிகளுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்த, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். சந்திரயான், மங்கல்யான், ஆதித்யா எல்-1, நிஸார் மற்றும் எதிர்கால திட்டமான ககன்யான் விண்கலன் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதே எங்களின் திட்டம்.
- கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை
-----
கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
அறிவியல் பாடம் கற்பதில், 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆர்வம், தற்போது, மாணவ, மாணவியர் மத்தியில் இல்லை. விண்வெளி ஆராய்ச்சி துவங்கி அனைத்து அறிவியல் சார்ந்த படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பெற அடிப்படை அறிவியலை படிக்க வேண்டியது அவசியம். தற்போது, அறிவியல் துறை சார்ந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி படிப்புகள் வந்துவிட்டன. விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உள்ளூரிலேயே வேலை கிடைக்க வேண்டும் என நினைத்து, வெளியிடங்களுக்கு செல்ல தயங்குவதன் விளைவு தான், இதுபோன்ற வேலைவாய்ப்புகள் குறித்து அவர்கள் சிந்திக்காமல் உள்ளனர். அறிவியல் ஆராய்ச்சி படிப்பில் சிறந்து விளங்கினால், வெளிநாடுகளில் கூட வேலைவாய்ப்பு பெற முடியும். இந்த அறிவியல் ஆர்வம், பள்ளி பருவத்தில் இருந்தே வர வேண்டும்.
- பாலமுருகன், உதவி பேராசிரியர்இயற்பியல் துறை, அவிநாசி அரசு கலைக்கல்லுாரி
------
அறிவியல் ஆர்வம் அதிகரிப்பு
அரசுப்பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த, அரசின் சார்பில் வானவில் மன்றம் செயல்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வானவில் மன்ற செயல்பாடுகளை முன்னெடுத்து நடத்துகிறது. மன்றத்தில் உள்ள கருத்தாளர்கள், பள்ளிகள் தோறும் சென்று மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த செய்முறை பயிற்சி வழங்கி, அதை மாணவர்களை செய்து காண்பிக்க செய்கின்றனர். இது, மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. ஆண்டுதோறும் 'துளிர்' என்ற பெயரில் வினாடி வினா மற்றும் திறனறிவு கட்டுரைப் போட்டி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துகிறோம். அவர்களது படைப்புகள் 'துளிர்' என்ற சிறுவர் இதழில் பிரசுரமாகிறது. அறிவியல் சார்ந்த தினங்களில், விண்வெளி விந்தைகளை டெலஸ்கோப் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு காட்டுகிறோம்.
- கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்வானவில் மன்றம்
---
மாணவர்களுக்கு ஊக்குவிப்பு
அறிவியல் சார்ந்த விஷயங்களை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்த, அரசின் சார்பில் வானவில் மன்றம் செயல்படுகிறது. நடமாடும் அறிவியல் ஆய்வகம் வாயிலாக, அறிவியல் சார்ந்த விஷயங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அவர்கள் நேரடியாக அறிவியல் படைப்புகளை உருவாக்கும் போது, அவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் அதிகரிக்கிறது. 'இஸ்ரோ' மற்றும் அறிவியல் சார் ஆராய்ச்சி மையங்களுக்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றனர்.
- கவுரிசங்கர், மாவட்ட செயலாளர்தமிழ்நாடு அறிவியல் இயக்கம்