/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி அருகே போதை வஸ்து விற்றதால் 'சீல்'! மாணவர்களை பாழ்படுத்தும் வியாபாரிகள்
/
பள்ளி அருகே போதை வஸ்து விற்றதால் 'சீல்'! மாணவர்களை பாழ்படுத்தும் வியாபாரிகள்
பள்ளி அருகே போதை வஸ்து விற்றதால் 'சீல்'! மாணவர்களை பாழ்படுத்தும் வியாபாரிகள்
பள்ளி அருகே போதை வஸ்து விற்றதால் 'சீல்'! மாணவர்களை பாழ்படுத்தும் வியாபாரிகள்
ADDED : செப் 20, 2024 05:54 AM

திருப்பூர் : உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய ஆய்வில், பள்ளிகள் மற்றும் 'டாஸ்மாக்' கடை அருகேயுள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, 25 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தல் படி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி, காவல் துறையினர் அடங்கிய குழுவினர், பள்ளிகள் அருகில் உள்ள பெட்டிக் கடைகள், 'டாஸ்மாக்' பார் அருகேயுள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தினர்.
கடந்த இரு நாட்களில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதற்காக, 25 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன; மொத்தம், 6.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை அரசு கருவூலத்தில், இ-செலான் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதான் நடவடிக்கை
அதிகாரிகள் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், ஹான்ஸ், குட்கா, கூல் லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வது, முதன் முறை கண்டுபிடிக்கப்பட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும், 15 நாள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்குவது.
இரண்டம் முறையும் அதே தவறை செய்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும், 30 நாளுக்கு கடையை பூட்டி வைப்பது; 3வது முறையும் தவறிழைத்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், 90 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்த முடக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.