ADDED : செப் 20, 2026 02:21 PM
உடுமலை: உப்பாறு அணையில் அணை பாதுகாப்பு மதிப்பீடு நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அரசு நீர்வளத்துறை அமைப்புகளில் ஒன்றான, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு சார்பில், அணைகளில் கட்டமைப்பு, நீரியல் மதகு பாதுகாப்பு, இயந்திர மற்றும் மின் உபகரணங்களின் நிலை, அணைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை ஆய்வு செய்து, அணை பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட ‘அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு நிபுணர் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவை சேர்ந்த, மத்தியநீர் ஆணையத்தின் தலைவர் பஜாஜ் தலைமையில், புவி தொழில் நுட்ப நிபுணர் டாக்டர் ஸ்ரீவல்சாகோலத்தையார், நீரியல் நிபுணர் சூரத்கல், நீர்வளத்துறை ஓய்வு பெற்ற தலைமைப்பொறியாளர் பத்மநாபன், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் செல்வம், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் குழுவினர், உப்பாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், உப்பாறு அணையின் இடது மற்றும் வலது கால்வாய் மதகுகள், உபரி நீர் வழிந்தோடி மதகுகள் மற்றும் மண் அணையின் உறுதித்தன்மை ஆகியவை குறித்து விரிவாகஆய்வு செய்தனர்.
அப்போது, அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து அறிவுறுத்தினர். ஆய்வின் போது, உடுமலை பி.ஏ.பி.,திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், உடுமலை கால்வாய் உதவி செயற்பொறியாளர் பொங்கியண்ணன், இளம் பொறியாளர் விஜயசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
