ADDED : ஜன 06, 2025 06:56 AM

திருப்பூர்:   சபரி டைமண்ட்ஸ் அண்ட் ஜூவல்ஸ், கொங்கு மண்டலம், ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில் மார்கழி அருள்மழை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, திருப்பூர், ஹார்விகுமாரசாமி மண்டபத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கியது.
தினமும் மாலை சிறப்பு வழிபாடு, அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, திருப்பூர், ஸ்ரீ சாய் கிருஷ்ணா நாட்டியக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
'குறைவில்லா நிறைவே' எனும் தலைப்பில், சென்னை சிவக்குமார் பேசியதாவது:
கண்களை திறந்து நாம் இறைவனை வணங்க வேண்டும். நம்மில் பலர் கோவிலுக்கு சென்றவுடன் கண்களை மூடி பிரார்த்தனை செய்கிறோம். இப்பழக்கத்தை மாற்றுங்கள். இறைவன் திருவடியை முழுமையாக கண்டு வணங்குங்கள். பக்தர்களின் உண்மையான பக்தியின் மூலம் எவ்வினைகளையும் போக்க வல்லவன் இறைவன். மலர்களை தொடுத்து, மந்திரங்களை கூறி நாம் ஆத்மார்த்தமாக நடத்தும் ஒவ்வொரு வழிபாட்டையும் இறைவன் காது கொடுத்து கேட்டு கவனிப்பார். உண்மையான பக்திக்கு பலன் இருக்கும்; பொருள், ஞானம், யோகம் இறைவனால் கிடைக்க பெறும்.
பக்தியும், பிரார்த்தனையும் உண்மையானதாக இருக்க வேண் டும். சிவாலயங்களில் நடக்கும் பூஜைகளில் மதிய வேளையில் நடக்கும் சிவபூஜை தான் சிறப்பானது. சூரியன் உச்சி வேளைக்கு வரும் வேளையில், சிவனின் நிழல் கீழே விழாத போது, நடப்பதால், உச்சிபூஜை சிறப்பு பெறுகிறது.
இவ்வாறு, சிவக்குமார் பேசினார். நிறைவாக, சபரி டைமண்ட்ஸ் அண்ட் ஜூவல்ஸ் முத்துநடராஜன் நன்றி கூறினார்.

