/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இளந்தளிர்'களால் விதைகள் விருட்சங்களாகும்!
/
'இளந்தளிர்'களால் விதைகள் விருட்சங்களாகும்!
ADDED : ஜூலை 27, 2025 07:16 AM

'ம ரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்' என்ற கோஷம், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சுற்றுச்சூழல் குறித்து அவர்கள் பெற்ற 'விழிப்பு', எந்தளவு 'உணர்வு' பூர்வமான வெற்றியை தந்திருக்கிறது, என்பதை கண்காணிப்பதும் அவசியம்.
அந்த வகையில், திருப்பூர் - நெருப்பெரிச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஏட்டுக்கல்வியோடு, வாழ்க்கை கல்வியாகவே மரக்கன்று நட்டு வளர்க்கும் பழக்கத்தை கற்றுத்தந்து கொண்டிருக்கின்றனர் ஆசிரியர்கள்.
பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி மற்றும் ஆசிரியர் அலெக்ஸ் மேரி, ராஜூ, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவசங்கரி உள்ளிட்டோரின் முயற்சி, வழிகாட்டுதலில், மாணவ, மாணவியரிடம் விதைகளை கொடுத்து, அதை மண் நிரப்பிய பையில் ஊன்றச் செய்கின்றனர். அந்த விதை முளைத்து, மரக்கன்றாக தழைக்க துவங்குகிறது.
பள்ளி தலைமையாசிரியை கூறியதாவது; எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான நீரும், நிலமும் விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் மரக்கன்று நட்டு வளர்ப்பது அவசியம் என்பதை, மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம். அதன்படி, 5 முதல், 8 வகுப்பு வரையுள்ள, 165 மாணவ, மாணவியரிடம் வேப்பம் உள்ளிட்ட மரங்களின் விதைகளை கொடுத்து, ஊன்றச் செய்துள்ளோம். அவை முளைத்து மரக்கன்றாக உருவெடுத்தவுடன், ஏதேனும் அறக்கட்டளை அல்லது தன்னார்வலர்கள் வாயிலாக, தேவையுள்ள இடங்களில், மாணவ, மாணவியர் வாயிலாகவே நட்டு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், பள்ளி வளாகத்தில் ஒரு விதைப்பெட்டி வைத்துள்ளோம்; அதில், கிடைக்கும் விதைகளை சேகரித்து வருகிறோம்.மாணவ, மாணவியர் தங்கள் ஊருக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும் போது, மரக்கன்று நடுவதற்குரிய வாய்ப்புள்ள இடங்களில் அந்த விதைகளை எடுத்துச் சென்று துாவி விட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதன் வாயிலாக, மாணவ, மாணவியர் மத்தியில், மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும். அதோடு, பாலிதீன் பயன்பாடை குறைக்க, மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.