எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதி: ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதி: ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
ADDED : ஆக 03, 2025 07:39 PM

ஜெருசலேம்: இஸ்ரேல் பிணைக்கைதி எவியத்தார் டேவிட் காசாவில் தனது சொந்த புதைகுழியை தோண்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது. 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.
அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என்கிறது இஸ்ரேல். படிப்படியாக விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஹமாஸ். இதனால் தான் போர் நிறுத்தம் வருவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேலை பணிய வைக்க தங்கள் வசம் இருக்கும் பிணைக்கைதி ஒருவரின் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.பிணைக்கைதி பெயர் எவ்யதார் டேவிட் வயது 24. இவர் ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் குடியுரிமை வைத்துள்ளார்.
ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில், சுரங்கப்பாதை ஒன்றில் டேவிட் மண்வெட்டியுடன் இருக்கிறார். தனது புதைகுழியை தானே தோண்டிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. எலும்பும் தோலுமாக, மெலிந்த உடலுடன் காணப்படும் டேவிட் வீடியோவில் கூறியதாவது:
நான் இப்போது என் புதைகுழியை தோண்டுகிறேன். ஒவ்வொரு நாளும், என் உடல் பலவீனமடைந்து வருகிறது. நான் நேரடியாக என் கல்லறைக்கு நடந்து செல்கிறேன். நான் அடக்கம் செய்யப்படப் போகும் கல்லறை இருக்கிறது. விடுதலை பெற்று நான் தூங்குவதற்கு நேரம் நெருங்கி வருகிறது. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
24 வயதான அந்த இளைஞனின் குடும்பத்தினர் இஸ்ரேல் அரசாங்கத்திடமும், உலக சமூகத்திடமும் டேவிட்டைக் காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்யுமாறு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வீடியோவைக் கண்டித்து, ஹமாஸ், டேவிட்டை வேண்டுமென்றே பட்டினி போட்டுக் கொன்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே, டேவிட் குடும்பத்தினரிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பக் கொண்டு வர தனது அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக உறுதியளித்துள்ளார்.