/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்; துார்வாரி துாய்மைப்படுத்த எதிர்பார்ப்பு
/
நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்; துார்வாரி துாய்மைப்படுத்த எதிர்பார்ப்பு
நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்; துார்வாரி துாய்மைப்படுத்த எதிர்பார்ப்பு
நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்; துார்வாரி துாய்மைப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:57 PM

திருப்பூர்; சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் நொய்யலை ஆக்கிரமிக்க அனுமதிக்காமல், வளம் பாலம் முதல் காசிபாளையம் பாலம் வரை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென, பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சாக்கடை கழிவு மற்றும் சாயக்கழிவால் மாசுபட்டிருந்த திருப்பூர் நொய்யல் ஆறு, தொழில்துறையினரின் விடாமுயற்சியாலும், திருப்பூர் மாநகராட்சி திட்டங்களாலும், ஏறத்தாழ மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 15 ஆண்டுகள் முன், சீமைக்கருவேல காடு போல் காணப்பட்ட நொய்யல் ஆற்றுப்பகுதி, திருப்பூரில் இன்று ஆறு போன்ற வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும், பருவமழை துவங்கும் முன்னதாக, நொய்யல் ஆறு மற்றும் முக்கிய நீரோடைகளை துார்வாரி சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறது. நொய்யல் ஆற்றில், வளர்மதி பாலம் துவங்கி, வளம் பாலம் வரையில், இடைப்பட்ட பகுதியை மட்டுமே துார்வாருகின்றனர்.
மற்ற பகுதிகளில், சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன. செடி, கொடி, புதர் மண்டியிருந்தால் ஆபத்தில்லை; எளிதாக அப்புறப்படுத்தலாம். சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தால், விஷம் போல் வேகமாக பரவிவிடும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, விதைகள் தண்ணீரில் சென்று, பல்வேறு பகுதியிலும் சீமைக்கருவேல மரம் ஆக்கிரமித்துவிடும்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஒரத்துப்பாளையம் அணையில், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் நடந்து வருகிறது. அதற்காக, அங்குள்ள பெரிய சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த, அதிகம் மெனக்கெட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வளம் பாலம் துவங்கி, மணியகாரம்பாளையம் பாலம் வரையிலான பகுதியையும், அங்கிருந்து காசிபாளையம் வரையிலான பகுதிகளையும், பொதுநல அமைப்புகள், மாநகராட்சி நிர்வாகம், தொழில் அமைப்புகள் கூட்டாக சேர்ந்து, சீமைக்கருவேல மரம் இல்லாத ஆற்றுப்பகுதியாக மாற்றியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
வளம் பாலத்துக்கு கிழக்கே, நொய்யல் ஆற்றை சில ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால், காடு போல் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளன. இயற்கைச் சீரழிவு மட்டுமின்றி, இது சமூக விரோதிகள் கூடாரமாக மாறவும் வாய்ப்புள்ளது.
மாநகராட்சி நிர்வாகம், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், காசிபாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றை துார்வாரி சுத்தப்படுத்த வாய்ப்புள்ளதா என்று ஆலோசிக்க வேண்டும்.
'பொக்லைன்' வைத்துள்ள நிறுவனங்களை அழைத்துப்பேசி, வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன்னதாக, நொய்யலை ஆக்கிரமித்து வரும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற மாவட்ட நிர்வாகமும் ஆவன செய்ய வேண்டும்.