/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'செமி கண்டக்டர்' பூங்கா; பல்லடத்தில் நிலம் தேர்வு
/
'செமி கண்டக்டர்' பூங்கா; பல்லடத்தில் நிலம் தேர்வு
ADDED : ஏப் 27, 2025 11:46 PM

பல்லடம்: பல்லடம் அருகே, 'செமி கண்டக்டர்' பூங்கா அமைக்க, 99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'கோவை மாவட்டம், சூலுார்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆகிய இடங்களில், 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்' என, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதற்கான நிலம் தேர்வு செய்யும் பணி வருவாய்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் அருகே, கேத்தனுார் கிராமத்தில், மின்வாரியத்தின், 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் நிலம் இல்லை. பல்லடம் அருகே கேத்தனுாரில் மின்வாரியத்தின் 99 ஏக்கர் நிலம், அரசு ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
செமி கண்டக்டர் என்பது மின்கடத்திக்கும், மின்கடத்தா பொருளுக்கும் இடையில் இருக்கும் ஒரு பொருள். இது கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்பட கூடியது.
'கணினி, தொலைக்காட்சி, கார், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில், செமி கண்டக்டர்கள் பயன்பாடு அதிகம் உள்ளது.
'எதிர்காலத்தில் இவற்றின் தேவை மேலும் அதிகரிக்கும். பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைவதால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும்' என்கின்றனர் தொழில் துறையினர்.