/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையில் கழிவுநீர் 'குளம்': பொதுமக்கள் மறியல்
/
சாலையில் கழிவுநீர் 'குளம்': பொதுமக்கள் மறியல்
ADDED : பிப் 06, 2025 02:20 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர், காவிலிபாளையம் ஆனந்தா அவென்யூ குடியிருப்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இறுதியில் அகற்றுவதற்கான அமைப்பு இல்லை. காவிலிபாளையத்தில் இருந்து கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் குளம் போல் தேங்கி வருகிறது.
மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகள், கழிவுநீர் ரோட்டுக்கு வருவதை தடுக்கும் வகையில் ஆனந்தா அவென்யூ குடியிருப்பு மக்கள் வீட்டு முன் உறிஞ்சு குழி அமைத்து கழிவுநீரை தேக்குமாறு வலியுறுத்தினர். பலர் அமைத்தாலும், சிலர் மறுப்பதால் கழிவுநீர் ரோட்டுக்கு வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், ரோட்டில் கழிவுநீர்தேங்குவதை தடுக்க வலியுறுத்தியும், கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில், ராம்நகர், காவிலிபாளையம், ஆனந்தா என்கிளேவ் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள், இவர்களுக்கு ஆதரவாக ஆனந்தா அவென்யூ குடியிருப்பில் உறிஞ்சு குழி அமைத்தவர்கள் நேற்று காலை பிரச்னைக்குரிய இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த மாநகராட்சி முதலாம் மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் கணேஷ், சிவக்குமார் ஆகியோர், ''விடுபட்ட வீடுகளில் உறிஞ்சு குழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உறிஞ்சு குழியை மீறி வரும் கழிவுநீர் லாரி மூலம் அப்புறப்படுத்தப்படும். கழிவு நீரால் பொதுமக்களுக்கு இனி பாதிப்பு ஏற்படாது.
ஆனந்தா அவென்யூ பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி கூறினார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.