/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடை கால்வாய் -- போக்குவரத்து நெருக்கடி - தேங்கும் குப்பை 56வது வார்டில்... 1008 பிரச்னைகள்!
/
சாக்கடை கால்வாய் -- போக்குவரத்து நெருக்கடி - தேங்கும் குப்பை 56வது வார்டில்... 1008 பிரச்னைகள்!
சாக்கடை கால்வாய் -- போக்குவரத்து நெருக்கடி - தேங்கும் குப்பை 56வது வார்டில்... 1008 பிரச்னைகள்!
சாக்கடை கால்வாய் -- போக்குவரத்து நெருக்கடி - தேங்கும் குப்பை 56வது வார்டில்... 1008 பிரச்னைகள்!
ADDED : ஜூலை 12, 2025 12:23 AM

திருப்பூர் மாநகராட்சியின் தெற்கு பகுதியில், தாராபுரம் ரோட்டில் உள்ளது, 56வது வார்டு. கரட்டாங்காடு, செரங்காடு, சந்திராபுரம், சாஸ்திரி நகர், இந்திராநகர், பண்ணாரிஅம்மன்நகர், மாணிக்க விநாயகர் நகர், விசாலாட்சிநகர், பி.ஏ.பி., நகர் உள்ளிட்ட பகுதிகள் வார்டில் உள்ளது.
வார்டில் தலையாய பிரச்னையாக சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு விவகாரம் உள்ளது. புவியியல் அமைப்பின் படி வார்டின் சந்திராபுரம், பழைய சந்திராபுரம் பகுதி அதனை சுற்றியுள்ள வீதிகள் உயரமாகவும், கரட்டாங்காடு, செரங்காடு பத்து வீதிகள் தாழ்வாகவும் உள்ளன.
வார்டில் கழிவுநீர் முழுமையாக வெளியேற விரிவான 'டிஸ்போசல் பாயின்ட்' எங்கும் இல்லை. காங்கயம் ரோடு வழியாக அல்லது தாராபுரம் ரோடு வழியாக சங்கிலிப்பள்ளத்துக்கு கழிவுநீரை கொண்டு செல்ல வழியில்லை. இதனால், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் பணி முழுமையாக முடிப்பது சவாலான பணியாக உள்ளது.
குறிப்பாக, தாராபுரம் ரோடு - புதுார் பிரிவு, செரங்காடு ரோட்டில், கழிவுநீர் வீடு, கடைகள் முன் தேங்கியிருப்பது, வெளியேற வழியின்றி, அடைப்பு ஏற்பட்டு அப்படியே உள்ளது. கால்வாயில் மண் அதிகமாக உள்ளது. கால்வாய்களின் உயரம், இரண்டு அடிக்கும் குறைவாக உள்ளது.
அதனை உயர்த்திக் கட்டினால், எந்த பக்கம் 'வாட்டம்' என தெரியாமல் பணி துவங்கப்படாமல் அப்படியே உள்ளது. எல்லோரா கார்டனில், கால்வாய் வசதி செய்தி தரப்படவில்லை. தாராபுரம் ரோடு, ஐ.டி.ஐ., பின்புற வீதியில் வீடு, நிறுவனங்கள் முன் அப்படியே கழிவுநீர் தேக்கி வைக்கப்படுவதால், பகலிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
விடிவு எப்போது?
திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், பலவஞ்சிபாளையம் பிரிவு முதல் கரட்டாங்காடு, புதுார் பிரிவு, சங்கிலிப்பள்ளம் ஓடை வரை விரிவான சாக்கடை கால்வாய் இல்லை. இதனால், ஓட்டல், நிறுவனங்கள், வீடுகளின் கழிவுநீர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்புறமிருந்து ஒரு கி.மீ., துாரத்துக்கு செரங்காடு வரை ஓடுகிறது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாதசாரிகள் நடக்க வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். மழைபெய்து விட்டால், கழிவுநீருடன் கலந்து மழைநீர் வேகமெடுப்பதால், சாலையும் அரிப்பு ஏற்பட்டு சேதமாகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வருவோர், ஐ.டி.ஐ., மாணவருக்கு சாலையின் இருபுறமும் ஸ்டாப் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரால், பஸ் வரும் வரை ஸ்டாப்பில் மூக்கை பிடித்தபடி நிற்க வேண்டிய நிலை, பஸ்சுக்கு காத்திருப்போருக்கு ஏற்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தாராபுரம் ரோட்டில் கால்வாய் பிரச்னை உள்ள போதும், நெடுஞ்சாலைத்துறை - மாநகராட்சி ஒருங்கிணைப்பு இல்லாததால், கால்வாய்க்கான அளவீடு பணி கூட இன்னமும் துவங்காமல் உள்ளது.
குப்பை தொட்டி இல்லை
வார்டில் நெருக்கமாக பல குடியிருப்புகள் செரங்காடு பகுதியில் உள்ளது. வீதி, சாலை முடிவு பெறும் ஒதுக்குபுறமான இடங்களில் குப்பை தொட்டி இல்லை. சந்திராபுரம், சூரிய கார்டனில் வழிநெடுக குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாய்கள் இழுத்துச் செல்கின்றன.
குப்பை அதிகம் சேரும் இடங்களில் கூடுதலாக தொட்டி வைக்க வேண்டும். தாராபுரம் ரோடு - புதுார் பிரிவு - கரட்டாங்காடு ரோட்டில் சாக்கடை கால்வாய் சிலாப் கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சென்றாலும், சுத்தம் செய்ய வழியில்லை. கால்வாய், மண், குப்பைகள் தேங்கியிருப்பதால், கழிவுநீர் ஓடாமல் அப்படியே தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது.
சந்திராபுரம் அம்மா உணவகம் - தாராபுரம் ரோடு சந்திப்பு சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும். கரட்டாங்காடு மெயின் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டது. திட்டமிடாமல் மீண்டும் மீண்டும் பல்வேறு பணிகளுக்கு சாலை தோண்டப்படுவதால், நிதி வீணாகிறது.
ஆறாவது வீதியில் குடிநீர் தொட்டி அருகே தரைப்பாலம் சேதமாகி, கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறது; வாகன ஓட்டிகள் டயர்களை பதம் பார்க்கிறது. இரண்டாவது வீதி வளைவில் சாலை குழியாக உள்ளது.
அடிக்கடி விபத்து
வார்டின் முக்கிய வீதிகளாக உள்ள கரட்டாங்காடு, செரங்காடு பகுதிகள் தாராபுரம் ரோட்டுடன் இணைகிறது. கரட்டாங்காடு - பெரிச்சிபாளையம் - வெள்ளியங்காடு சந்திப்பு சாலையாக, தாராபுரம் ரோட்டில் புதுார் பிரிவு உள்ளது.
நால்ரோடு சந்திப்பில் 'பீக் ஹவர்ஸில்' வாகனங்கள் எப்போதும் தாறுமாறாக செல்கிறது. சிக்னல் இருந்தும், யாரும் கண்டுகொள்வதில்லை. அதே பகுதியின் இரண்டு புறமும் ஸ்டாப் இருப்பதால், பஸ்களும் நால்ரோட்டில் நிற்கிறது.
ஆனால், பயணிக்கும் வளைவில் திரும்பும் வாகனங்கள் வேகம் குறைவதில்லை. விபத்து ஏற்படும் சூழல் உள் ளது. எனவே, வேகத்தடுப்பு அமைத்து, வாகனங்கள் வேகத்தை குறைக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தாராபுரம் ரோட்டில் சாக்கடை கால்வாய் பிரச்னை உள்ள போதும், நெடுஞ்சாலைத்துறை - மாநகராட்சி ஒருங்கிணைப்பு இல்லாததால், கால்வாய்க்கான அளவீடு
பணி கூட இன்னமும்
துவங்காமல் உள்ளது
வார்டில் கால்வாய்களின் உயரம் குறைவாக உள்ளது. உயர்த்திக்கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, தாராபுரம் ரோட்டில் கழிவு நீர் தேங்காமல் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பிருந்து, சங்கிலிப்பள்ளம் ஓடை வரை புதிய கால்வாய் கட்ட நிதி கேட்டுள்ளேன். குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், குப்பைத்தொட்டி வார்டுக்கு அதிகமாக வைக்க வேண்டும். வார்டுக்கென, ஒதுக்கப்பட்ட ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருவதில்லை. மூன்றில் ஒரு பங்கு தான் அனுப்பப்படுகின்றனர். அடிப்படை தேவைகளுக்கும் ஒவ்வொரு முறையும் பணிகளுக்கும், நிதி ஒதுக்கீடும் பேசிபேசித்தான் வாங்க வேண்டியுள்ளது. குடிநீர் மட்டும் சரிவர வழங்குகின்றனர். எட்டு நாட்களுக்கு ஒருமுறை வார்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
- தங்கராஜ் (பா.ஜ.,), 56வது வார்டு கவுன்சிலர்.