/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களுக்கு இரையாகும் ஆடுகள்! வெறியாட்டம் தொடர்வதால் கால்நடை வளர்ப்போர் வேதனை
/
நாய்களுக்கு இரையாகும் ஆடுகள்! வெறியாட்டம் தொடர்வதால் கால்நடை வளர்ப்போர் வேதனை
நாய்களுக்கு இரையாகும் ஆடுகள்! வெறியாட்டம் தொடர்வதால் கால்நடை வளர்ப்போர் வேதனை
நாய்களுக்கு இரையாகும் ஆடுகள்! வெறியாட்டம் தொடர்வதால் கால்நடை வளர்ப்போர் வேதனை
ADDED : மே 04, 2025 12:27 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளாக தெரு நாய்களின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில், விவசாய நிலங்களுக்குள் புகும் தெரு நாய்கள், பட்டிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள் மற்றும் கோழிகளை மூர்க்கத்தனமாக தாக்குகின்றன; இதில், அவை பலியாகின்றன. அந்த வகையில், இதுவரை கொத்து கொத்தாக ஆடு, கோழிகள் பலியாகி இருக்கின்றன.
ஆறுதல் விஷயமாக, நாய் தாக்கி இறக்கும் ஆடு, கோழிகளுக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்தது. தொடர்ச்சியாக, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
இந்த முன்னெடுப்புகளுக்கு திருப்பூர் பகுதி விவசாயிகளே காரணமாக இருந்துள்ளனர். இருப்பினும், தெரு நாய்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையிலும், கிராமப்புறங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்கவோ, அப்புறப்படுத்தவோ, கருத்தடை செய்யவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தினமும் தெரு நாய்களின் வெறியாட்டத்துக்கு, கொத்து, கொத்தாக ஆடுகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று கூட, காங்கயம், சிவன்மலை கிராமம், சாவடிபாளையத்தில், மூலக்காடு தோட்டம், சுப்ரமணி என்பவரது தோட்டத்தில், 15 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளன.
கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது: வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு வளர்ப்பு தொழிலும், அதனால் கிடைக்கும் வருமானத்தில் தான், பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். முழுக்க முழுக்க இயற்கை முறையில், புல், தீவனம் உள்ளிட்டவற்றை வழங்கி, எவ்வித செயற்கை உணவூட்டல், ஊசி போன்றவற்றை பயன்படுத்தாமல் வளர்த்து ஆடுகளை விற்பனை செய்வதில், விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்; சந்தையில், ஆடுகளுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. ஆடுகளை பலிவாங்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல், அரசு மெத்தனம் காண்பித்தால், ஆடு வளர்ப்பே ஒழிந்து விடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.