/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களுக்கு பலியாகும் ஆடுகள்; கிராமசபாவில் எதிர்ப்பு காட்ட முடிவு
/
நாய்களுக்கு பலியாகும் ஆடுகள்; கிராமசபாவில் எதிர்ப்பு காட்ட முடிவு
நாய்களுக்கு பலியாகும் ஆடுகள்; கிராமசபாவில் எதிர்ப்பு காட்ட முடிவு
நாய்களுக்கு பலியாகும் ஆடுகள்; கிராமசபாவில் எதிர்ப்பு காட்ட முடிவு
ADDED : ஜன 24, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூரில் தொடரும் தெருநாய்கள் அட்டகாசத்தால், கால்நடைகள் பலியாவது அதிகரித்து வருகிறது; இதனால், விவசாயிகள் கடும் விரக்தியடைந்துள்ளனர். நாளை (26ம் தேதி) நடக்கவுள்ள கிராம சபையில் கருப்புக்கொடி ஏந்தி, பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்கள், விவசாய நிலங்களில் புகுந்து, பட்டிகளில் கட்டப்பட்டுள்ள ஆடுகளை கடித்து காயப்படுத்துகின்றன. நாய்களின் மூர்க்கத்தனமான தாக்குதலில் ஆடுகள் இறக்கின்றன. இதே போன்று, கோழிகளையும் கடிக்கின்றன.
'இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அரசு, இதுவரை எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் உள்ளாட்சி நிர்வாகங்களின் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட, நாளை (26ம் தேதி), கிராம ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபையில், கருப்பு சட்டையணிந்தும், கருப்பு கொடியேந்தியும் பங்கேற்பது என, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, காங்கயம் ஒன்றியம், மறவபாளையம் ஊராட்சி, திட்டம்பாளையம் பகுதியில், ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, ஆடுகளை கடித்தன. இதில், 5 ஆடுகள் பலியாகின; 3 குட்டிகள் கவலைக்கிடமாக உள்ளன.

